ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு: உலகத் தலைவர்கள் உட்பட 2,000க்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் லண்டன் வருகை!

ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு: உலகத் தலைவர்கள் உட்பட 2,000க்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் லண்டன் வருகை!

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் சுமார் 7.5 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published on

லண்டன்,

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது.

ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் வெள்ளமென திரண்டு வருகின்றனர். இரவிலும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் ராணியின் மீதுள்ள அன்பை வெளிக்காட்ட அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.

கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, வரும் 19-ம் தேதி அன்று ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும். இதில் 2,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்குமாறு ஏறக்குறைய அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் இங்கிலாந்து அழைப்பிதழ்களை அனுப்பியது.

லண்டனுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களைப் பாதுகாக்க, பிரிட்டிஷ் எம்ஐ5 மற்றும் எம்ஐ6 உளவுத்துறை நிறுவனங்கள், லண்டனின் பெருநகர காவல்துறை மற்றும் ரகசிய சேவை ஆகியவை இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து காவல் துறை இதுவரை மேற்கொள்ளாத மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கை இதுவாகும்.லண்டன் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் காணப்படும் என்று முன்னாள் ராயல் பாதுகாப்பு அதிகாரியான சைமன் மோர்கன் தெரிவித்துள்ளார். சுமார் 7.5 லட்சம் பேர் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் துணை அதிபர் வாங் கிஷான், அதிபர் ஜி ஜின்பிங் சார்பாக இறுதிச் சடங்கில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இன்று லண்டன் புறப்படுகின்றனர்.

இந்தியாவில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள உள்ளார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் ஜப்பானின் பேரரசர் நருஹிட்டோ ஆகிய பல தலைவர்களும் இறுதிச் சடங்கில் பங்கேற்பார்கள்.

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற இங்கிலாந்துடன் முரண்பட்ட நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com