ஆன்மிகம்

சம்பந்தரால் தோன்றிய கார்த்திகை தீப வழிபாடு + "||" + Appeared Sambandar Kartikai lamp Worship

சம்பந்தரால் தோன்றிய கார்த்திகை தீப வழிபாடு

சம்பந்தரால் தோன்றிய கார்த்திகை தீப வழிபாடு
சென்னையில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருநாள் அன்று, தீப வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
சென்னையில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருநாள் அன்று, தீப வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் இறைவன் கபாலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் மேற்கு நோக்கியபடி அருள்பாலிக்கிறார். அம்பாள் கற்பகாம்பாள் என்ற திருநாமத்துடன் தெற்கு நோக்கியபடி காட்சி தருகிறார்.

ஒருமுறை திருக்கயிலாய மலையில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு பஞ்சாட்சர மந்திரத்தின் பொருளை உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது அன்னை பார்வதி, உபதேசத்தைக் கவனிக்காமல், அருகில் இருந்த மயிலை கவனித்ததால் மயில் உருவம் அடைந்தாள்.

தன் தவறுக்கு வருந்திய உமையவள், ஈசனை வேண்டி சாப விமோசனம் கிடைக்க, பூலோகத்தில் புன்னை மரங்கள் நிறைந்த இடத்தில் மயில் வடிவத்திலேயே சிவபூஜை செய்துவந்தாள். பல கால தவத்தின் பயனாக சாப விமோசனம் பெற்றாள். இந்த ஆலயத்தின் தல மரமான புன்னை மரத்தின் அடியில், மயில் வடிவில் அன்னை பார்வதி பூஜிக்கும் சிவலிங்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது. உமையவள் ஈசனை மயில் வடிவில் பூஜித்ததால் இந்தத் தலம் மயிலாபுரி, மயிலை, மயிலார்ப்பு என்று பெயர்பெற்று, தற்போது ‘மயிலாப்பூர்’ என்று அழைக்கப்படுகிறது.

சென்னை மயிலாப்பூரில் சிவநேசர் என்ற வணிகர் இருந்தார். அளவு கடந்த சிவ பக்தியுடைய அவரது மகள் பூம்பாவை. மூன்று வயதிலேயே இறைவனின் அருளால் திருப் பதிகம் பாடத்தொடங்கிய சம்பந்தரைப் பற்றி கேள்விப்பட்ட சிவநேசர், அவருக்கு தன் மகளை மணம் முடித்து வைக்க எண்ணினார்.

ஆனால் விதி வேறு விதமாக விளையாடியது. ஒருநாள் நந்தவனத்தில் பூக்களை பறித்துக்கொண்டிருந்த பூம்பாவையை, பாம்பு தீண்டியதில் அவள் இறந்துவிட்டாள். சிவ நேசர் மனம் கலங்கிப் போனார். மகளின் உடலை தகனம் செய்து, சாம்பலையும், எலும்பையும் ஒரு பொற்குடத்தில் இட்டு வைத்திருந்தார். திருஞானசம்பந்தரை சந்திக்கும்போது, பூம்பாவையின் சாம்பலையாவது, அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிவநேசர் அவ்வாறு செய்தார்.

பின்னர் ஒரு நாள் சம்பந்தர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு வந்தார். அவரைச் சந்தித்த சிவநேசர், தன் மகள் பற்றி கூறியதுடன், பூம்பாவையின் சாம்பல், எலும்பு அடங்கிய பொற்குடத்தை எடுத்து வந்து சம்பந்தர் முன்பு வைத்தார்.

சம்பந்தர் திருமயிலை கபாலீஸ்வரரை தியானித்து ‘மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை’ என்று தொடங்கும் பதிகம் பாடினார். என்ன விந்தை! பூம்பாவை உயிர்த்தெழுந்தாள். அவளை திருமணம் செய்து கொள்ளும்படி, சம்பந்தரை வேண்டினார் சிவநேசர்.

ஆனால் மீண்டும் உயிர் அளித்ததால், பூம்பாவை தமக்கு மகளாகிறாள் எனக்கூறி திருமணம் செய்ய மறுத்துவிட்டார் சம்பந்தர். பின்பு பூம்பாவை நெடுநாள் சிவப்பணி செய்து சிவனடி சேர்ந்தாள்.

மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் ஆலயக் கொடிமரத்தின் அருகில் தனிச்சன்னிதியில் திருஞானசம்பந்தரும், பூம்பாவையும் எழுந்தருளி உள்ளனர். சம்பந்தர் கையில் பொற்றாளத்துடனும், அவரை வணங்கிய நிலையில் பூம்பாவையும் காட்சி தருகிறார்கள்.

இந்த ஆலயத்தில் பூம்பாவை உயிர்ந்தெழுந்த நிகழ்வுக்குப் பிறகு கார்த்திகை தீபத் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவதாக, தல வரலாறு கூறுகிறது. ஏனெனில் பூம்பாவையை உயிர்ப்பிப்பதற்காக பதிகம் பாடிய திருஞானசம் பந்தர், அந்தப் பாடலில்,

‘வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்' என்கிறார்.

அதாவது ‘திருக்கார்த்திகை திருநாளில், திருமயிலையில் நடைபெறும் விளக்கிடுதல் காணாமல் சென்று விட்டாயோ பூம்பாவாய்’ என்கிறார் சம்பந்தர். அன்றிலிருந்து இன்றுவரையிலும் திருமயிலை கபாலிநாதர் ஆலயத்தில் திருக்கார்த்திகை திருநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இன்றும் இங்குள்ள தலவிநாயகரான நர்த்தன விநாயகர் சன்னிதியின் தென்புறம் அமைந்துள்ள அண்ணாமலையார் சன்னிதி விமான மேற்பகுதியில் சுதையால் ஆன, அண்ணாமலை போன்ற மலையமைப்பின் உச்சியில் உள்ள தீபக்குடுவையில் திருக்கார்த்திகை தினத்தில் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். அதன்பின்பு சொக்கப்பனை கொளுத்துதல் வைபவமும் நடக்கிறது கண்கொள்ளாக்காட்சியாகும்.

சென்னை எழும்பூரில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும், தாம்பரத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும், அடையாறில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் மயிலாப்பூர் அமைந்துள்ளது.

-சிவ.அ.விஜய் பெரியசுவாமி, கல்பாக்கம்.