இன்று அனுமன் ஜெயந்தி.. ஆத்ம பலம் கிடைக்க ராம நாமம் சொல்லுங்கள்


இன்று அனுமன் ஜெயந்தி..  ஆத்ம பலம் கிடைக்க ராம நாமம் சொல்லுங்கள்
x

அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனுக்கு அபிஷேக ஆராதனை நடத்தி, வடைமாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்து வழிபடுகின்றனர்.

அஞ்சனையின் மைந்தனாகத் தோன்றிய அனுமன் (ஆஞ்சநேயர்), ஐம்புலன்களை வென்றவன். அசாத்திய சாதனை செய்யும் ஆற்றல் படைத்தவன். ராமதூதன். நித்திய சிரஞ்சீவியாகத் திகழ்பவன். மார்கழி அமாவாசையில் மூலநட்சத்திரத்தில் பிறந்தவன்.

அனுமனுக்கு பாடம் நடத்திய பெருமை சூரியனைச் சேரும். வாயு பகவானின் மகனான அனுமன், குழந்தையாக இருந்தேபோது சூரியனை பழம் என்று நினைத்து வானமண்டலத்திற்கு தாவினார். சூரியனின் இயக்கம் தடைபட்டு நின்றது. இதனால் உலகமே ஒருகணம் அசையாமல் நின்று போனது. விஷயத்தை அறிந்த இந்திரன், ஓடோடிவந்து அனுமனின் முகத்தில் தன் வஜ்ராயுதத்தால் ஓங்கியடித்தான். மயங்கிய குழந்தை அனுமனைத் தாங்கிப்பிடித்தார் வாயுபகவான். மேலும் தன் மகன் அனுமன் தாக்கப்பட்டதால் கடும் கோபம் அடைந்தார். கோபமான வாயுவை இந்திரனும், சூரியனும் சமாதானப்படுத்தினர். தன் தவறுக்கு பரிகாரமாக சூரியன் அனுமனுக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசித்ததுடன், இலக்கணங்களையும் கற்றுத் தந்தார். அன்று முதல் அனுமன் சர்வவியாகரண பண்டிதன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றார். வியாகரணம் என்றால் இலக்கணம்.

மார்கழி அமாவாசை என்றாலே அனுமன் ஜெயந்தி (ஆஞ்சநேயர் ஜெயந்தி) நினைவுக்கு வரும். அவ்வகையில் இன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் விரதமிருந்து ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனையை நடத்தி, வடைமாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்து வழிபடுகின்றனர்.

ஆஞ்சநேய வழிபாடு, ராமர் வழிபாடு என தனித்து பிரிக்க முடியாது. அனுமன் வழிபாட்டில் ராம நாம ஜெபத்தை விட சிறந்த ஒன்று இருந்து விட முடியாது. எங்கெல்லாம் ராம நாமம் இருக்கின்றதோ அங்கெல்லாம் அனுமன் சூட்சும ரூபத்தில் வந்து அருள் புரிகிறார். எனவே தாரக மந்திரமாகிய ராம நாம ஜெபம் எல்லா வகையான பேறுகளையும் அளிக்க வல்லது. குறிப்பாக, அனுமன் ஜெயந்தி அன்று ராம நாமத்தை உச்சரித்து அனுமனை வழிபடுவது மிக நல்லது. உடல் மன வலிமை, ஆத்ம பலம், என அனுமனின் அளவில்லாத அருள் கிட்டும்.

கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லியும் ஆஞ்சநேயரை வழிபடலாம்.

ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்:

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்


Next Story