மூலிகை திருநீறு


மூலிகை திருநீறு
x

திண்டுக்கல் மாவட்டம் பாதாள செம்பு முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திருநீறு சிறப்பு வாய்ந்தது. 18 வகையான மூலிகைகளைக்கொண்டு இந்த திருநீறு தயாரிக்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம்பட்டியில் உள்ளது, பாதாள செம்பு முருகன் கோவில். இத்தல இறைவனான முருகப்பெருமானுக்கு ஒரு கருங்காலி மாலையை அணிவித்தும், பக்தர்களான தாங்கள் ஒரு கருங்காலி மாலையை அணிந்தும், 9 முறை தீபம் ஏற்றி வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.

இந்தக் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திருநீறு சிறப்பு வாய்ந்தது. 18 வகையான மூலிகைகளைக்கொண்டு இந்த திருநீறு தயாரிக்கப்படுகிறது. இந்த திருநீறு அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை, சஷ்டி, செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் மட்டுமே கொடுக்கப்படுகிறது. நேரடியாக இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும். ஏனெனில் இறைவனை வழிபடும் பக்தர், தன்னுடைய நெற்றியில் பூசிக்கொள்ளும் வகையில் ஒரு சிட்டிகை அளவுக்குதான் விபூதி வழங்கப்படும். அதனால் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வாய்ப்பில்லை.

இந்த திருநீறு தயாரிப்பதற்கு கருந்துளசி, சோற்றுக்கற்றாழை வேர், கருஞ்சித்தகத்தி, பேய்மிரட்டி பூக்கள், மருதாணி, வில்வ ஓடு, கருங்காலி மரத்தூள், வாழைமரத்தின் அடிப் பகுதி, சித்திரை மாதத்தில் பூக்கும் சரக்கொன்றை பூக்கள், தொட்டாஞ்சிணுங்கி, மஞ்சள், குங்குலியம், அடுக்கு மல்லி, மனோரஞ்சிதம் பூ, மகிழம் பூ, நாகலிங்க பூ உள்பட 18 வகையான மருத்துவ குணம் மற்றும் நறுமணம் மிகுந்த பொருட்கள் சேகரிக்கப்படுகிறது. இந்த மூலிகை தேடலுக்காக வனத்திற்குள் செல்லும் முன்பு, சிவபெருமான் மற்றும் முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடக்கிறது. பின்னர் செந்நாயுருவி வேர் கொண்டு காப்பு கட்டப்படுகிறது.

திருநீறுக்காக சேரிக்கப்படும் ஒவ்வொரு மூலிகைகளும், ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் சேகரிக்கப்படுகிறது. உதாரணமாக பவுர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் வில்வ ஓடு சேகரிக்கப்படுகிறது. இதேபோல் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் குறிப்பிட்ட மூலிகைகளை சேகரிக்கின்றனர். அனைத்து மூலிகைகளையும் சேகரித்த பிறகு நிழலில் உலர்த்தி பொடியாக்கப்படுகிறது.

திருநீறு தயாரிப்பதற்கு யானை சாணம், காரா பசுமாட்டு சாணம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலர்த்தி பொடியாக்கப்பட்ட சாணம், மூலிகைகள், பூக்கள் ஆகியவற்றை அளவீடு செய்ய, வெண்கலத்தால் ஆன கிண்ணங்கள் பயன்படுத்தப்படுகிறது. அதன்பிறகு அவை அனைத்தும் சாம்பல் ஆக்கப்பட்டு, மருத்துவம் மற்றும் நறுமணம் மிகுந்த திருநீறாக தயாராகிறது. ஒருமுறை திருநீறு தயாரிக்க 7 மாதங்கள் வரை ஆகிறது.

பல்வேறு மூலிகைகளைக் கொண்டு தரமான முறையில் தயாரிக்கப்படும் இந்த திருநீறை, உடலில் எங்கு பூசினாலும், நரம்புகள் பலப்படும் என்கிறார்கள்.


Next Story