தமிழக- கர்நாடக எல்லையில் உள்ளமல்லிகார்ஜூன சாமி கோவில் குண்டம் விழா


தமிழக- கர்நாடக எல்லையில் உள்ளமல்லிகார்ஜூன சாமி கோவில் குண்டம் விழா
x

தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள மல்லிகார்ஜூனசாமி கோவில் விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர்.

ஈரோடு

தாளவாடி

தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள மல்லிகார்ஜூனசாமி கோவில் விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர்.

மல்லிகார்ஜூன சாமி கோவில்

தாளவாடியை அடுத்த கொங்கஹள்ளி என்ற வனப்பகுதியில் தமிழக-கர்நாடக எல்லையில் 3 மலைகளுக்கு நடுவே பாறை குகையில் மல்லிகார்ஜூன சாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு சுயம்பு லிங்கம் உள்ள இந்த கோவில் லிங்காயத்து பழங்குடியின இன மக்களுக்கு சொந்தமானது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் 18 கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் சார்பில் குண்டம் விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் மாலை ருத்திராப்பிஷேக பூஜையுடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து கிரிஜம்மா நந்தவன தோப்பில் இருந்து மேளதாளத்துடன் சாமியின் ஆபரணங்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன.

ஆண் பக்தர்கள் மட்டும்...

இந்த கோவிலில் பெண்கள் நுழையக்கூடாது என்பது ஐதீகம். ஆண் பக்தர்கள் மட்டும் புடைசூழ கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து மல்லிகார்ஜூன சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்ட குண்டத்தில் தீ வார்க்கப்பட்டு அதில் மலர்கள் தூவப்பட்டன.

பூசாரி மட்டும் இறங்கினார்

இதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை 8 மணி அளவில் பக்தி கோஷங்கள் முழங்க குண்டம் பகுதியில் கூடினர். அப்போது கோவிலின் பூசாரி மட்டுமே குண்டம் இறங்கினார். பூசாரியை தவிர பக்தர்கள் யாரும் குண்டம் இறங்கக்கூடாது என்பது இந்த கோவிலின் வழக்கம். இதனால் அங்கு வந்த ஆண் பக்தர்கள் பலரும் குண்டத்தை தொட்டு வழிபட்டனர்.

அன்னதானம்

பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புலி வாகனத்தில் மல்லிகார்ஜூன சாமி வீதி உலா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான தமிழ்நாடு- கர்நாடக மாநில பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி முனிவர் அவதாரத்தில் வந்த சாமியை பெண்கள் ஊருக்கு வெளியே உள்ள கிரிஜம்மா நந்தவன தோப்பில் இருந்து வழிபட்டனர். விழாவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வன் தலைைமயில் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story