பொய் - தீமையின் திறவுகோல்


பொய் - தீமையின் திறவுகோல்
x

பொய் பேசுவது, பொய் சத்தியம் செய்வது, பொய் சாட்சி கூறுவது, பொய் கூறி வியாபாரம் செய்வது போன்றவை பெரும் பாவங்களாகும். மேலும், இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவையாகும். பொய் பேசவே கூடாது. அதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

பொய் பேசுவது என்பது தீமைகளின் அஸ்திவாரமாக அமைந்து விடுகிறது. பொய் என்பதே பாவங்களின் அடிப்படையாக உருவெடுத்து விடுகிறது. பொய் பேசுவதின் விளைவாக அதை பேசுபவரின் உள்ளம் இருளடைந்து விடுகிறது. அவரின் உள்ளம் கடினமாகவும் மாறிவிடுகிறது. அவரின் நெஞ்சம் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறது. பொய் பேசுவதினால் உள்ளம் கலக்கம் அடைய ஆரம்பித்து விடுகிறது.

உள்ளத்தில் தோன்றிய பொய், நாவின் வழியே வெளியாகி, நாவை பாழாக்கி விடுவதுடன் நாவில் இருந்து உடலின் பிற உறுப்புகளுடன் பயணித்து ஒட்டுமொத்த உறுப்புகளையும், அதன் வழியே வெளிப்படும் செயல்பாடுகளையும் பாழாக்கி, அவன் சொற்களையும், செயல்களையும், நிலைகளையும், பழக்க வழக்கங்களையும் பாவமயமாக மாற்றி விடுகிறது.ஒரு மனிதனிடத்தில் இருக்கும் மோசமான ஆயுதம் என்னவெனில், தமது இரு தாடைகளுக்கு மத்தியில் அவன் மறைத்து வைத்திருக்கும் பொய் பேசும் நாவு தான்.

பொய் என்பது ஒரு கொடிய வியாதி. அது இல்லாததை உருவாக்கும்; இருப்பதை இல்லாமல் ஆக்கும். அது சத்தியத்தை அசத்தியமாக காட்டும்; அசத்தியத்தை சத்தியமாக நிலைநாட்டும். நன்மையை தீமையாக மாற்றும்; தீமையை நன்மையாக மாற்றும்.ஒட்டு மொத்தத்தில் அது கொடிய நரகத்தின் வழிகாட்டி. நரகத்தை கண் முன் காட்டும் நாள்காட்டி. நரகத்தில் தள்ளும் ஆள்காட்டி. 'பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிகாட்டும்; தீமை நரகத்திற்கு வழிகாட்டும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் 'பெரும் பொய்யர்' எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி)

'நான்கு விஷயங்கள் கோபத்தையும், குரோதத்தையும் ஏற்படுத்தும். அவை: தற்பெருமை, பொறாமை, கோள் சொல்லுதல், பொய் ஆகும்'. ஒரு பொய்யன் தனது வாழ்நாளிலேயே கேவலத்தை எதிர்கொள்வான். அல்லது மரணத்திற்கு பிறகு கேவலத்தை சந்திப்பான். இப்படிப்பட்ட கேவலமே அவன் பொய்யன் என்பதற்கு சாட்சியாகும். பொய் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகவும் அடையாளப்படுத்தப்படுகிறது.

'நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும்போது பொய்யுரைப்பான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான்; அவனிடம் நம்பி ஒப்படைத்தால் மோசடி செய்வான் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

பொய் சாட்சியம் கூறுவது, பொய் பேசுவது சாதாரண பாவம் இல்லை. அது பெரும்பாவமாக பார்க்கப்படுகிறது. 'பெரும் பாவங்களிலேயே மிகப்பெரும் பாவம் ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என நபி (ஸல்) கேட்டுவிட்டு, 'அதுதான் 'பொய் பேசுவது' அல்லது 'பொய் சாட்சியம் கூறுவது' என்றார்கள்'. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)

'யார் பொய் சத்தியம் செய்து ஒரு இறைநம்பிக்கையாளரின் உரிமையை அபகரித்துக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைக் கட்டாயமாக்கி விட்டான்; சொர்க்கத்தை அவருக்கு தடை செய்து விட்டான் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூ உமாமா (ரலி), நூல்: முஸ்லிம்)

'மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேச மாட்டான். 1) செய்த தர்மத்தைச் சொல்லிக் காட்டுபவன், 2) பொய் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவன், 3) தமது கீழங்கியை (கணுக்காலுக்கும்) கீழே இறக்கிக் கட்டுபவன் என நபி (ஸல்) கூறினார்கள்'.

'ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகத் திட்டமிட்டு யார் பொய் சத்தியம் செய்கிறாரோ அவர் (மறுமையில்) தம் மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையில்தான் அவனைச் சந்திப்பார் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம்).

பொய் பேசுவது, பொய் சத்தியம் செய்வது, பொய் சாட்சி கூறுவது, பொய் கூறி வியாபாரம் செய்வது போன்றவை பெரும் பாவங்களாகும். மேலும், இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவையாகும். பொய் பேசவே கூடாது. அதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

ஒருவேளை பொய் பேசுவதாக இருந்தால் பின்வரும் மூன்று காரணங்களுக்கு மட்டுமே இஸ்லாம் அனுமதிக்கிறது. அதாவது: 'மக்கள் பொய் என்று சொல்லக்கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதாக நான் கேள்விப்படவில்லை; மூன்று பொய்களைத் தவிர. 1) போர் தந்திரத்திற்காக சொல்லப்படும் பொய், 2) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்து வதற்காகச் சொல்லப்படும் பொய், 3) குடும்ப ஒற்றுமைக்காக கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய் ஆகும் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: உம்மு குல்சும் (ரலி), நூல்: முஸ்லிம்)'


Next Story