கேட்ட வரம் அருளும் சிறுவாபுரி முருகன்


கேட்ட வரம் அருளும் சிறுவாபுரி முருகன்
x

ஆலய இறைவனான பாலசுப்பிரமணியரை மனமுருகி வேண்டி வந்தால், சொந்தமாக வீடு கட்டும் வாய்ப்பு அமையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

அசுவமேத யாகம் நடத்த ராமபிரான், குதிரையை ஏவிவிட்டார். அது பல இடங்களைக் கடந்து வால்மீகி முனிவரின் இருப்பிடமான ஆசிரமத்திற்கு அருகில் வந்தது. ராமரின் பிள்ளைகளான லவனும், குசனும் அந்தக் குதிரையைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டி வைத்தனர். குதிரையை காணாததால், அதன் நிலையை அறிந்து வரும்படி முதலில் அனுமன் அனுப்பப்பட்டார். அவரையும், லவனும், குசனும் சேர்ந்து ஒரு மரத்தில் கட்டிப்போட்டனர். குதிரையை மீட்பதற்காக லட்சுமணனை ராமர் அனுப்பினார். ஆனால் அவரையும் லவ-குசர்கள் கட்டிப் போட்டு வைத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராமபிரான், தாமே நேரடியாக வந்து, தன்னுடைய மகன்கள் என்று அறியாத காரணத்தால் அவர்களிடம் போரிட்டு குதிரையை மீட்டுச் சென்றார். அந்த இடமே தற்போதைய சிறுவாபுரி என்கிறார்கள். ராமாயண காலத்தில் குசேலபுரியாக இருந்த இடமே தற்போது சிறுவாபுரியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த சிறுவாபுரி பகுதி, அருணகிரிநாதர் காலத்தில் சிறப்புவாய்ந்த இடமாக மாறியது. இந்திரன் மற்றும் தேவர்களுக்கு அமுது அளித்து, வீடு பேறு கிடைக்க முருகப்பெருமான் அருள்பாலித்த இடமாகவும் இந்த சிறுவாபுரி விளங்குகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. பத்மாசூரனை வதம் செய்து வெற்றிபெற்ற முருகப்பெருமான், அங்கிருந்து புறப்பட்டு வந்தபோது தங்கி இளைப்பாறிய இடமாக இந்த சிறுவாபுரி இருக்கிறது. மேலும் அங்கு தங்கியிருந்த போது, இந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கு அமுது அளித்துள்ளார். அங்கேயே கோவில் கொள்ள தேவர்கள் கேட்டுக்கொண்டதை அடுத்து இங்கும் பாலசுப்பிரமணியராக எழுந்தருளி காட்சி தருகிறார்.

இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளை கொண்டதாக உள்ளது. உயரமான கொடிமரம், அதற்கு முன்பாக பச்சை மரகத மயில் வீற்றிருக்கிறது. தென்மேற்கு மூலையில் மரகதக் கல்லினால் ஆன சூரியனார் அருள, அவருக்கு நேர் எதிரில் கிழக்கில் கம்பீரமாக மரகத விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது. பின் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், ஆதிமூலவர், நாகர், பைரவர், நவக்கிரக சன்னிதிகளும் அமைந்திருக்கின்றன. கருவறையில் பாலசுப்பிரமணியராக, முருகப்பெருமான் அருள்கிறார்.

மூலவருக்கு தெற்குப்பகுதியில் அண்ணாமலையார் அருள்புரிகிறார். இங்கு அண்ணாமலையும், உண்ணாமலையும் எழுந்தருளியுள்ள நிலையில், வள்ளி நங்கை மணவாளப் பெருமான் திருமணக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆலயத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலவர், நவக்கிரக விக்கிரங்கள் தவிர மற்றவை அனைத்தும் மரகத பச்சை கல்லால் ஆனவை. இந்த ஆலய இறைவனை, அருணகிரிநாதர் சிறப்புற புகழ்ந்து பாடியிருக்கிறார்.

இந்த ஆலய இறைவனுக்கு, ஒரு மண்டலம் (48 நாட்கள்), நெல்லி முள்ளி பொடி கொண்டு அபிஷேகம் செய்து வந்தால், தீராத நோயில் இருந்தும் விடுபடலாம். 48 நாட்களும் ஆலயத்திற்கு வரவேண்டும் என்பது இல்லை. கோவில் அர்ச்சகரிடம், அந்த பொடியைக் கொடுத்து அபிஷேகத்தில் சேர்க்க செய்தால் மட்டுமே போதுமானது.

அமைவிடம்

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சென்னைக்கு வடக்கே 34 கிலோ மீட்டர் தூரத்திலும், சென்னை சென்ட்ரல் முதல் கும்முடிபூண்டி ரெயில் மார்க்கத்தில் 39 கிலோ மீட்டர் தூரத்திலும், கவரப்பேட்டையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது சிறுவாபுரி.

வி.கஜேந்திரன் மீஞ்சூர்.

வீடு கட்ட உதவும் பெருமான்

இந்த ஆலய இறைவனான பாலசுப்பிரமணியரை மனமுருகி வேண்டி வந்தால், சொந்தமாக வீடு கட்டும் வாய்ப்பு அமையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இத்தல மூலவரை செவ்வாய்க்கிழமை தோறும், தொடர்ந்து ஆறு வாரங்கள் வழிபாடு செய்து, வள்ளி மணவாளப் பெருமானை வணங்கி வந்தால் திருமணத் தடை நீங்கும். செல்வ வளம் பெருகும், நினைத்த காரியங்கள் வெற்றி அடையும். இந்த தலத்தில் உள்ள மூலவரை ஆறு முறை வலம் வரவேண்டும் என்கிறார்கள். அப்படி வலம் வந்தால், மாற்றங்கள் நிறைந்த இன்பம் வாழ்வு உண்டாகும்.


Next Story