சிவகிரிஎல்லை மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா


சிவகிரிஎல்லை மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா
x

சிவகிரி எல்லை மாகாளியம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.

ஈரோடு

சிவகிரி

சிவகிரி எல்லை மாகாளியம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.

எல்லை மாகாளியம்மன் கோவில்

சிவகிரியில் உள்ள முத்தூர் ரோட்டில் பிரசித்தி பெற்ற எல்லை மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பொங்கல் விழா கடந்த 14-ந் தேதி அன்று குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

குண்டம் விழா

நேற்று அதிகாலை 5 மணிக்கு பெண் பக்தர்கள் திரளானோர் கொடுமுடி சென்று அங்குள்ள காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து காலை 10 மணி அளவில் சிவகிரி வந்தனர். பின்னர் சிவகிரி தேர் வீதி வழியாக தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் கோவிலை சென்றடைந்ததும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெற்றது. அப்போது கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி தீ மிதித்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்கள் பலர் கைக்குழந்தையுடன் குண்டம் இறங்கியது அங்குள்ள பக்தர்களை பரவசம் அடைய செய்தது. பின்னர் இரவு 7.30 மணி அளவில் கரகாட்டம் மற்றும் நையாண்டி மேளத்துடன் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எல்லை மாகாளியம்மன் திருவீதி உலா நடந்தது.

பொங்கல் விழா

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பொங்கல் விழா நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தும், மாவிளக்கு படைத்தும் வழிபடுகிறார்கள்.

இதையடுத்து காலை 6 மணிக்கு கொடுமுடி காவிரி ஆற்றுக்கு தீர்த்தம் எடுக்க செல்லும் நிகழ்ச்சியும், 8 மணிக்கு அக்னி கும்பம் ஊர்வலம் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு தீர்த்தக்குட ஊர்வலமும், மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.


Next Story