நீங்கள் விரும்புவதையே மற்றவர்களுக்கும் கொடுங்கள்....


நீங்கள் விரும்புவதையே மற்றவர்களுக்கும் கொடுங்கள்....
x

மனிதர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் என்று கர்த்தர் கூறுகிறார்.

பிரியமானவர்களே, அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்பார்ப்பது என்னவாக இருக்கும்?. அனைவரும் நம்மிடம் அன்பாக பழக வேண்டும், நமக்குரிய மரியாதை தரவேண்டும், ஏதாவது உதவி தேவை என்றால் அது உடனே நிறைவேற வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். அவ்வாறு நாம் விரும்பியது நடக்க என்ன செய்ய வேண்டும் என்பதை கர்த்தர் அழகாக சொல்லி இருக்கிறார்.

கர்த்தர் சொல்கிறார், "உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், மனிதர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்" என்று கூறுகிறார்.

இதற்கு உதாரணமாக விவிலியத்தில் உள்ள நிகழ்வுகளை காண்போம்.

ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சாதாரண மனிதனான தாவீது என்பவரை, சாமுவேல் என்ற தீர்க்கதரிசி மூலமாக இஸ்ரவேலின் ராஜாவாக அபிசேகம் செய்கிறார், கர்த்தர். அப்போது இஸ்ரவேலின் ராஜாவாக சவுல் என்பவர் அரசாள்கிறார். அந்நாட்களில் இஸ்ரவேல் மக்களுக்கும், பெலிஸ்தியர் என்ற மக்களுக்கும் தீவிரமாக போர் நடைபெற்று வந்தது. பெலிஸ்திய ராணுவத்தில் கோலியாத் என்ற பலசாலி இருந்தார். தாவீது இந்த கோலியாத்தை வென்று இஸ்ரவேலுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுக்கிறார். இதையடுத்து தாவீதை தன்னுடைய ராணுவத்திற்கு அதிகாரியாக்கினார், சவுல்.

யுத்தத்தில் வெற்றி பெற்ற சவுல் ராஜா, ராணுவத் தளபதி தாவீது மற்றும் படை வீரர்கள் இஸ்ரவேல் தேசத்திற்கு திரும்பி வரும் போது மேள தாளங்கள் முழங்க மக்கள் அவர்களை வரவேற்றனர். அப்போது பெண்கள் பாடும் போது, "சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்" என்று தாவீதை பெருமைப்படுத்தும் வகையில் பாடினார்கள். இந்த வார்த்தைகள் சவுலுக்கு எரிச்சலாயிருந்தது. சவுலின் முகம் வேறுபட்டது. அது முதற்கொண்டு தாவீதை கொலை செய்ய சவுல் தீவிரமாய் இருந்தான். கர்த்தர் கிருபையால் சவுல் என்ன தான் முயன்றாலும் தாவீதைக் கொல்ல முடியவில்லை.

சவுலுக்குப் பயந்து அதுல்லாம் என்னும் குகைக்கு தாவீது போனான். அங்கே ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறு முறுக்கிறவர்கள் என்று ஏறக்குறைய நானூறு பேர் இருந்தார்கள். தாவீது அவர்களுக்கு தலைவனானான். சவுல் தாவீதை வனாந்திரத்திலும், மலைகளிலும் தேடிக் கொண்டிருக்கும் போது, தெரியாமல் ஒருநாள் தாவீதிடம் தனியாக ஒரு குகையில் சிக்கி விட்டான்.

அப்போது தாவீதுடன் இருந்தவர்கள் 'உன் சத்துருவை கர்த்தர் உன் கையில் ஒப்புக் கொடுத்துள்ளார்' என்று கூறி அவனைக்கொல்ல முயன்றார்கள். தாவீது அவர்களைத் தடுத்தான். அந்த நேரத்தில் சவுலுக்குத் தெரியாமல் அவனுடைய சால்வையின் ஒரு பகுதியை தாவீது அறுத்தான்.

பின்னர், தாவீது தன்னோடு இருந்தவர்களைப் பார்த்து "சவுல் ராஜாவின் மேல் என் கையைப் போடும் படியான காரியத்தை நான் செய்யாத படிக்கு கர்த்தர் என்னைக் காப்பாராக" என்றான்.

அப்போது சவுல் தாவீதை நோக்கிப் பார்த்து, "நீ என்னைப் பார்க்கிலும் நீதிமான், நீ எனக்கு நன்மை செய்தாய், நானோ உனக்கு தீமை செய்தேன், கர்த்தர் என்னை உன் கையில் ஒப்புக்கொடுத்தும் நீ என்னைக் கொன்று போடவில்லை, இன்று நீ எனக்கு செய்த நன்மைக்காக கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக. நீ நிச்சயமாக ராஜாவாயிருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்யபாரம் உன் கையில் நிலைவரப்படும் என்றும் அறிவேன்" என்று கூறினான்.

தன்னைக்கொல்ல முயன்ற சவுலை தாவீது மன்னித்து, தீமைக்கு பதிலாக நன்மை செய்தார். தாவீது தன்னுடைய முப்பது வயதில் ராஜாவானார். நாற்பது வருடம் சிறப்பாக ஆட்சி நடத்தினார். இஸ்ரவேல் வரலாற்றில் தலைசிறந்த ராஜாவாக தாவீது இன்றளவும் போற்றப்படுகிறார்.

மற்றவர்களை மன்னிக்கும் மனப்பக்குவம், கர்த்தருக்கு பயப்படுகிற பயம், தீமைக்கு பதிலாக நன்மை போன்ற குணங்களே அவனை ராஜா என்ற உயரத்துக்கு அழைத்துச் சென்றது. ஆனால் ராஜா ஆவதற்கு முன்பாக அவனோடு இருந்தவர்கள் யாரென்றால், கடன் பட்டவர்கள், முறு முறுக்கிறவர்கள், குறை சொல்கிறவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள்.

ஆம், இன்றைக்கும் நம்முடைய வாழ்விலும் நம்மோடு இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், நம்மை அவர்கள் அவமானப்படுத்தினாலும், நம்மீது குறை கூறினாலும், தப்பான பொய் குற்றச்சாட்டுகள் கூறினாலும், நம்மை ஒதுக்கி வைத்தாலும் நாம் அவர்களை மன்னித்து, அவர்களை குறைகூறாமல், குற்றம் பார்க்காமல், நம்மைப் போலவே நம்மை வெறுப்பவர்களையும் நேசித்தால், இன்னும் "மற்ற மனிதர்கள் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமோ, அதையே நாம் மற்றவர்களுக்கு திருப்பி அளிக்கும் போது, நீங்களும் ராஜாவாக உயர்த்தப் படுவீர்கள்".

"உன்னிடத்தில் நீ அன்பு கூருவது போல பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக" என்ற ஒரே வார்த்தையில் இயேசுவின் அன்பு வேதத்தில் கூறப்பட்டுள்ளது, அவர் நமக்காக தம்முடைய ஜீவனையே தந்தாரே! என்ன ஒரு அன்பு! நேற்றும், இன்றும், என்றும் ஜீவிக்கிற இயேசு உங்களையும், என்னையும், நம் அனைவரையும் வாழ்வில் உயர்த்தி அழகு பார்ப்பார், ஆமேன்.


Next Story