20 ஓவர் உலக கோப்பை: இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

பெர்த்,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த போட்டி தொடரில் பெர்த்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் இந்தியா-தென்ஆப்பிரிக்கா (குரூப் 2) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், அடுத்த ஆட்டத்தில் 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தையும் வீழ்த்தி தனது பிரிவில் முதலிடத்தில் இருக்கிறது. பேட்டிங்கில் விராட்கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யாவும், பந்து வீச்சில் முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆர்.அஸ்வின், அக்‌ஷர் பட்டேலும் நல்ல நிலையில் உள்ளனர். விராட்கோலி தொடர்ந்து 2 ஆட்டங்களிலும் அரைசதம் விளாசியதுடன் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இதுவரை 989 ரன்கள் (23 ஆட்டங்களில்) குவித்துள்ள விராட்கோலி இன்னும் 28 ரன்கள் எடுத்தால் அதிக ரன் எடுத்தவரான இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனேவின் (1,016 ரன்கள், 33 ஆட்டம்) சாதனையை முறியடிக்க முடியும். அதனை இந்த ஆட்டத்தில் விராட்கோலி சாதிப்பார் என்று நம்பலாம்.

உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி 'ஹாட்ரிக்' வெற்றியை ருசித்து அரைஇறுதி வாய்ப்பை நெருங்கும் வியூகத்துடன் களம் இறங்கும். சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்றதால் இந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் விளையாடும்.

தென்ஆப்பிரிக்கா எப்படி?

தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க லீக் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. ஜிம்பாப்வேக்கு எதிரான அந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றியின் விளிம்பில் இருக்கையில் மழை புகுந்து முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. அடுத்த ஆட்டத்தில் அந்த அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்தது.

பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக இருக்கிறது. அந்த அணியின் ரிலீ ரோசவ் சர்வதேச 20 ஓவர் போட்டியில் தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் அடித்து சூப்பர் பார்மில் இருக்கிறார். குயின்டான் டி காக், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்க்ராம், டேவிட் மில்லர் என்ற பெரிய பேட்டிங் பட்டாளமே இருக்கிறது. வேகப்பந்து வீச்சில் அன்ரிச் நோர்டியா, ககிசோ ரபடா மிரட்டக்கூடியவர்கள். சுழற்பந்து வீச்சில் கேஷவ் மகராஜ், தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும். பந்து நன்கு பவுன்ஸ் ஆகும். இதனால் சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சிக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் இங்கிடி சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

மழை பெய்ய வாய்ப்பு

தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து புயல்கள் அன்ரிச் நோர்டியா, ரபடா ஆகியோர் தங்களது 'ஷாட் பிட்ச்' தாக்குதல் மூலம் இந்திய அணியினருக்கு கடும் குடைச்சல் கொடுக்க முயற்சிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. வேகப்பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ளும் விதத்தை பொறுத்தே ஆட்டத்தின் போக்கு அமையும்.

இந்த ஆட்டத்தில் மழை குறுக்கிட வாய்ப்பு இருக்கிறது. பெர்த்தில் இன்று மழை பெய்ய 20 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இதுவரை சர்வதேச 20 ஓவர் போட்டியில் 23 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 13-ல் இந்தியாவும், 9-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. 20 ஓவர் உலக கோப்பையை போட்டியை பொறுத்தமட்டில் இரு அணிகளும் 5 முறை சந்தித்துள்ளன. இதில் இந்தியா 4 முறை வென்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா ஒரே ஒரு முறை வெற்றி கண்டு இருக்கிறது. சமபலம் வாய்ந்த இந்த இரு அணிகளும் அரைஇறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தி கொள்ள கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

மாலை 4.30 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்) விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், தினேஷ் கார்த்திக், ஆர்.அஸ்வின், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்.

தென்ஆப்பிரிக்கா: பவுமா (கேப்டன்) குயின்டான் டி காக், ரிலீ ரோசவ், மார்க்ராம், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னெல் அல்லது மார்கோ ஜேன்சன், கேஷவ் மகராஜ், ககிசோ ரபடா, அன்ரிச் நோர்டியா, இங்கிடி.

இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story