வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க 3 ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு தடை

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த நடவடிக்கையால் 3 பேரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
image courtesy; AFP
image courtesy; AFP
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் முஜீப்-உர்-ரகுமான், பசல்ஹக் பருக்கி, நவீன்-உல்-ஹக் ஆகியோர் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போன்று பல நாடுகளில் நடக்கும் 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

இதற்கிடையே அவர்கள் தங்களை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரினர். மேலும் வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட அனுமதி கேட்டனர்.

இந்த நிலையில் முஜீப்-உர்-ரகுமான், பசல்ஹக் பருக்கி, நவீன்-உல்-ஹக் ஆகியோருக்கு 2 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக தடையில்லா சான்றிதழ் வழங்க ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. மேலும் அவர்களின் மத்திய ஒப்பந்தத்தை தாமதப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததாவது, 3 வீரர்களும் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலக நினைப்பது அவர்கள் வணிக லீக் போட்டிகளில் விளையாடும் ஆர்வத்தை காட்டுகிறது. ஆப்கானிஸ்தானுக்காக விளையாடுவதை விட அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்.அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்தது.

2024 ஐபிஎல் தொடரில் முஜீப் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், நவீன்-உல்-ஹக் லக்னோ அணிக்கும் மற்றும் பசல்ஹக் பருக்கி ஐதராபாத் அணிக்கும் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். ஆனால் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த நடவடிக்கையால் இவர்கள் 3 பேரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com