எங்கள் இளம் விக்கெட் கீப்பர் அடித்த 3 சிக்சர்கள்தான் அணி வெற்றி பெற உதவியது - கெய்க்வாட்


எங்கள் இளம் விக்கெட் கீப்பர் அடித்த 3 சிக்சர்கள்தான் அணி வெற்றி பெற உதவியது - கெய்க்வாட்
x

image courtesy: PTI

தினத்தந்தி 15 April 2024 5:13 AM GMT (Updated: 15 April 2024 5:41 AM GMT)

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை வெற்றி பெற்றது.

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கெய்க்வாட் 69 ரன்களும், ஷிவம் துபே 66 ரன்களும், கடைசி ஓவரில் களமிறங்கிய எம்.எஸ். தோனி 4 பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர் உட்பட 20 ரன்களும் குவித்து அசத்தினர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். ஆனால் மற்ற வீரர்கள் சொதப்பியதால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

முன்னதாக இந்த போட்டியில் டேரில் மிட்செல் அவுட்டானதும் களமிறங்கிய சி.எஸ்.கே. அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி கடைசி 4 பந்துகளை மட்டும் எதிர்கொள்ளும் வாய்ப்பை பெற்றார். அதில் 6, 6, 6 என ஹாட்ரிக் சிக்சர்களை பறக்க விட்ட அவர் 20 (4 பந்துகளில்) ரன்களை 500 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து மாஸ் பினிஷிங் கொடுத்தார்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் : "எங்கள் அணியில் உள்ள இளம் விக்கெட் கீப்பர் (எம்.எஸ்.தோனி) அடித்த மூன்று சிக்சர்கள்தான் இந்த போட்டியில் எங்களுக்கு பெரியளவில் உதவி உள்ளது. இந்த போட்டியின் வித்தியாசமே அவர் கடைசியாக அடித்த அந்த 20 ரன்கள்தான். நாங்கள் இதுபோன்ற மைதானத்தில் விளையாடும்போது10 முதல் 15 ரன்கள் வரை கூடுதலாக வேண்டும் என்று நினைத்தோம்.

அந்த வகையில் இந்த போட்டியில் இறுதி நேரத்தில் தோனி சிறப்பாக அடித்துக் கொடுத்தார். பும்ரா மிடில் ஓவர்களில் மிகச்சிறப்பாக பந்து வீசினார். அவருக்கு எதிராக சில திட்டங்களையும் நாங்கள் வைத்திருந்தோம். அதேபோன்று பந்துவீச்சிலும் எங்களது வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இது போன்ற மைதானத்தில் 6 ஓவர்களில் 60 ரன்கள் வருவதெல்லாம் நடக்கக்கூடிய ஒன்றுதான். இந்த போட்டியில் பதிரானா மிகச் சிறப்பாக பந்துவீசினார். அதேபோன்று துஷார் தேஷ்பாண்டே மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியவர்களும் சிறப்பாக பந்துவீசியதை மறந்துவிடக்கூடாது அனைவருமே தங்களது பங்களிப்பை சரியாக வழங்கியிருந்தனர்" என்று கூறினார்.


Next Story