4-வது டெஸ்ட்: ரோகித் அரை சதம்; வெற்றியை நெருங்கிய இந்தியா

உணவு இடைவேளை வரை, இந்திய அணியின் சுப்மன் கில் 15 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
4-வது டெஸ்ட்: ரோகித் அரை சதம்; வெற்றியை நெருங்கிய இந்தியா
Published on

ராஞ்சி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 104.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 353 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் அதிக அளவாக, ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 73 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் 73 ரன்கள் அடித்திருந்தார். இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 103.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் சேர்த்து இருந்தது.

இந்தியா தரப்பில் முதல் இன்னிங்சில் துருவ் ஜூரேல் (90), ஜெய்ஸ்வால் (73) ரன்களை எடுத்திருந்தனர். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லீ 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 46 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சில் 53.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிராவ்லி 60 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால், இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்பின்னர், 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 8 ஓவர்களில் 40 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியா தரப்பில் ரோகித் 24 ரன்னுடனும், ஜெய்ஸ்வால் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இதனை தொடர்ந்து 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா 55 ரன்கள் (5 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து போக்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால், 37 ரன்களில் ஆட்டமிழந்து உள்ளார். ரஜத் பட்டிதார் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

உணவு இடைவேளை வரை, இந்திய அணியின் சுப்மன் கில் 15 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்கள் சேர்த்து உள்ளது. வெற்றி பெற 78 ரன்கள் தேவை என்ற இலக்குடன் இந்தியா தொடர்ந்து விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com