அஸ்வின் அபார சதம்... முதல் இன்னிங்சில் இந்தியா 376 ரன்கள் குவிப்பு

இந்தியா தரப்பில் முதல் இன்னிங்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார்.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

சென்னை,

இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்மூல் ஹொசைன் ஷாண்டோ பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டகாரரான ரோகித் 6 ரன்களிலும், கில் டக் அவுட் ஆகியும், கோலி 6 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். மூவரின் விக்கெட்டையும் ஹசன் மக்மூத் காலி செய்தார்.

இதையடுத்து களம் புகுந்த ரிஷப் பண்ட் 39 ரன், கே.எல்.ராகுல் 16 ரன், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 56 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து அஸ்வின் - ஜடேஜா பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தனர்.

இதன் மூலம் சரிவிலிருந்து மீண்ட இந்தியா முதல் நாளில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் குவித்திருந்தது. அஸ்வின் 102 ரன்களுடனும், ஜடேஜா 86 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வங்காளதேசம் தரப்பில் ஹசன் மக்மூத் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று தொடங்கிய 2வது நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஜடேஜா 86 ரன்னில் அவுட் ஆகி சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து களம் புகுந்த ஆகாஷ் தீப் 17 ரன்னிலும், நிலைத்து நின்று ஆடிய அஸ்வின் 113 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 91.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 376 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் ஹசன் மக்மூத் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்சை ஆட உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com