இந்திய சுழலில் சிக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள்... அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்...!


இந்திய சுழலில் சிக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள்... அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்...!
x

இந்தியா முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

நாக்பூர்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே 177 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனை தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கி விளையாடியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து நேற்று நடந்த 2-ம் நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ரோகித் சர்மா 120 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

இதனிடையே, டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஜடேஜா, அக்சர் பட்டேல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜடேஜா 70 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ஆனாலும், அக்சர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட 223 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், 223 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. உஸ்மன் குவாஜா, டேவிட் வார்னர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால், முதல் இன்னிங்சை போல 2வது இன்னிங்சிலும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

அஸ்வின் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் குவாஜா 5 ரன்னில் அவுட் ஆனார். அடுத்துவந்த மார்னஸ் லபுஷேன் 17 ரன் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான வார்னர் 10 ரன் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த மெட் ரென்சா 2 ரன்னில் அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்னிலும், பீட்டர் கென்ட்ஸ்கப் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

இந்தியாவை விட 181 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா உள்ளது. இந்திய தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.


Next Story