முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-அயர்லாந்து அணிகள் இன்று மோதல்


இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் இன்று நடக்கிறது.

டப்ளின்,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்க இங்கிலாந்துக்கு சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது அங்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

இதற்கிடையே, ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய இரண்டாம் தர அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு 20 ஓவர் போட்டியில் ஆடுகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட்கோலி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை.

இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான அணியினருடன் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சென்று இருப்பதால் அயர்லாந்துக்கு எதிரான தொடருக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் வி.வி.எஸ்.லட்சுமண் பயிற்சியாளராக செயல்படுகிறார்.

சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்த ஹர்திக் பாண்ட்யா முதல்முறையாக இந்திய அணியை வழிநடத்துகிறார். கேப்டனாக அவரது செயல்பாடு எப்படி? இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்திய அணியில் ராகுல் திரிபாதி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் புதிதாக இடம் பிடித்துள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு களம் காணும் அணியில் இடம் கிடைப்பது சந்தேகம் தான். பேட்டிங்கில் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், தினேஷ் காத்திக்கும், பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், ஹர்ஷல் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், அக்‌ஷர் பட்டேலும் வலுசேர்க்கிறார்கள்.

சவாலை சமாளிக்குமா?

இந்திய அணி 20 ஓவர் போட்டியில் இதுவரை அயர்லாந்துடன் 3 முறை மோதி இருக்கிறது. அந்த 3 ஆட்டங்களிலும் இந்திய அணி தான் வெற்றி பெற்றுள்ளது. வலுவான இந்திய அணியின் சவாலை ஆன்டி பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்து சமாளிப்பது கடினமே. என்றாலும் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் முடிந்த அளவுக்கு போராட்டம் அளிக்க காத்திருக்கிறார்கள்.இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் அல்லது தீபக் ஹூடா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான் அல்லது அர்ஷ்தீப் சிங் அல்லது உம்ரான் மாலிக்.

அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங், ஆன்டி பால்பிர்னி (கேப்டன்), காரெத் டெலானி, ஹாரி டெக்டர், லார்கான் டக்கர், கர்டிஸ் கேம்பெர், ஆன்டி மெக்பிரைன், ஜார்ஜ் டாக்ரெல், மார்க் அடைர், கிரேக் யங், ஜோஷ் லிட்டில்.

இரவு 9 மணிக்கு...

இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 3, சோனி டென்4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

'கேப்டன்ஷிப்பில் சிறந்த ஆட்டம் வெளிப்படுகிறது' - இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா

'பொறுப்பை எடுத்துக் கொள்வது எனக்கு பிடிக்கும் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இப்போது பொறுப்பு இன்னும் கொஞ்சம் அதிகமாகியுள்ளது. கேப்டன்ஷிப் இருக்கும் போது நான் சிறப்பாக ஆடுவதாக எப்போதும் நம்புகிறேன். டோனி, கோலி ஆகியோரது கேப்டன்ஷிப்பில் இருந்து நான் நிறைய கற்று இருக்கிறேன். அதே சமயம் நான் நானாக இருக்க விரும்புகிறேன். நிச்சயம் ஆட்டத்தை நான் புரிந்து கொள்வதில் வித்தியாசம் இருக்கும்' என்று அவர் கூறினார்.



Next Story