ஆர்சிபிக்கு எதிராக குஜராத் வெற்றி: உற்சாகமாக கொண்டாடிய மும்பை வீரர்கள் - வீடியோ...!


ஆர்சிபிக்கு எதிராக குஜராத் வெற்றி: உற்சாகமாக கொண்டாடிய மும்பை வீரர்கள் - வீடியோ...!
x

Image Courtesy: @hardikpandya7

ஐபிஎல் தொடரில் நேற்றைய கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்.

மும்பை,

16வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவு பெற்றன. இந்த லீக் ஆட்டங்களின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நாளை சென்னையில் தொடங்க உள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு குஜராத், சென்னை, லக்னோ அணிகள் எளிதாக முன்னேறிய நிலையில் எஞ்சிய ஒரு இடத்துக்கு பெங்களூரு, மும்பை, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதில் நேற்றி ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அபார வெற்றி பெற்றதன் மூலம் ராஜஸ்தான் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறியது.

இதையடுத்து கடைசி லீக் போட்டியான குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் பெங்களூரு அணி களம் இறங்கியது. இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் முக்கியமாக பார்க்கப்பட்டது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி கோலியின் அதிரடி சதம் மூலம் 197 ரன்கள் குவித்தது. இதையடுத்து 198 ரன்கள் குஜராத் அணி எடுத்தால் வெற்றி பெறுவதோடு மும்பை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலையில் சுப்மன் கில் அபாரமான ஆட்டத்தால் குஜராத் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

இந்நிலையில், குஜராத் - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை மும்பை அணி வீரர்கள் டிவியில் பார்த்துள்ளனர். வெற்றிக்கான ரன்னை சுப்மன் கில் அடித்த போது மும்பை வீரர்கள் துள்ளி குதித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வீரர்கள் உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.




Next Story