இந்திய ரசிகர்கள் பெரும்பாலான நேரங்களில் அமைதியாக இருந்தபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது- பேட் கம்மின்ஸ்

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
image courtesy; twitter/ @ICC
image courtesy; twitter/ @ICC
Published on

அகமதாபாத்,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி இந்தியாவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது.

இந்த ஆட்டத்தில் 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வென்றது. டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதையும், இந்திய வீரர் விராட் கோலி தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

முன்னதாக சொந்த மண்ணில் நடைபெறும் இந்த போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்திருந்தார். இந்தியாவை சிறப்பாக செயல்பட்டு தோற்கடித்து இந்திய ரசிகர்களை சத்தமின்றி அமைதியாக இருக்க வைப்போம் என்று சவால் விடுத்திருந்த அவர் கடைசியில் அதை செய்து காட்டி கோப்பையையும் வென்றார்.

அந்த வகையில் இந்திய ரசிகர்களை இறுதி போட்டியில் அமைதியாக இருக்க வைத்தது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கும் பேட் கம்மின்ஸ் இது குறித்து பேசியது பின்வருமாறு;- "நாங்கள் பந்து வீசிய தருணத்தில் இந்திய ரசிகர்கள் பெரும்பாலான நேரங்களில் அமைதியாக இருந்தபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சில நேரங்களில் அவர்கள் அதிகப்படியான சத்தத்தை வெளிப்படுத்தினார்கள். இந்திய அணிக்கு அவர்கள் கொடுக்கும் ஆதரவு அபாரமாக இருந்தது. ஒருவேளை இப்போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும் இவ்வளவு ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடிய அனுபவத்தை எப்போதும் மறந்திருக்க மாட்டோம்" என்று கூறினார்..

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com