ஐ.பி.எல். தொடங்கியபோது உடலளவில் பெங்களூருவில் இருந்தேன்... ஆனால் மனதளவில்... - சூர்யகுமார் யாதவ்

ஐ.பி.எல். தொடரில் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூருவுக்கு எதிரான சூர்யகுமார் யாதவ் அரை சதம் அடித்து அசத்தினார்.
image courtesy: twitter/@IPL
image courtesy: twitter/@IPL
Published on

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை வெற்றி பெற்றது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் டு பிளஸ்சிஸ் 61, ரஜத் படிதார் 50, தினேஷ் கார்த்திக் 53 ரன்கள் அடித்தனர். மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

அதைத்தொடர்ந்து 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பைக்கு ரோகித் சர்மா 38, இஷான் கிஷன் 69, சூர்யகுமார் யாதவ் 52, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 26, திலக் வர்மா 16 ரன்கள் அடித்து 15.3 ஓவரிலேயே எளிதாக வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

இப்போட்டியில் அனைத்து வீரர்களும் வெற்றியில் முக்கிய பங்காற்றினாலும் உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் 52 (19 பந்துகள்) ரன்கள் அடித்தது மும்பைக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. ஏனெனில் காயத்தால் ஆரம்பகட்ட போட்டிகளில் அவர் விளையாடாதது மும்பையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இப்போட்டியில் 17 பந்துகளில் 50 ரன்கள் தொட்ட அவர் தன்னுடைய அதிவேகமான ஐ.பி.எல். அரை சதத்தை அடித்து பார்முக்கு வந்துள்ளார்.

இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு:-"எப்போதும் வான்கடே மைதானத்திற்கு மீண்டும் வருவது நல்லது. ஐ.பி.எல். துவங்கியபோது நான் உடலளவில் பெங்களூருவில் இருந்தேன். ஆனால் மனதளவில் நான் இங்கேதான் இருந்தேன். எப்போதும் மும்பை அணியை விட்டு வெளியேறியதாக உணரவில்லை. ரோகித் மற்றும் இஷான் ஆகியோர் 10 ஓவரிலேயே எங்கள் வேலையை முடித்தனர்.

எனவே ரன் ரேட்டுக்காக நாங்கள் வேகமாக பினிஷிங் செய்ய வேண்டும் என்பதை அறிவோம். எதிரணி வைக்கும் பீல்டிங்கிற்கு தகுந்தாற்போல் நான் என்னுடைய வித்தியாசமான ஷாட்டுகளை அடிக்க பயிற்சி எடுத்து இப்படி விளையாடுகிறேன். இஷான் கிஷனிடம் மகிழ்ச்சியுடன் விளையாடுமாறு மும்பை அணி நிர்வாகம் சொன்னார்கள். அதற்காக பேட்டிங்கில் கடினமாக உழைத்த அவர் தற்போது சிறப்பாக விளையாடுகிறார். ஒரே அணியில் விளையாடுவதால் கடந்த 2 - 3 வருடமாக நான் பும்ராவுக்கு எதிராக பேட்டிங் செய்யவில்லை. ஏனெனில் ஒன்று அவர் என்னுடைய பேட்டை உடைப்பார் அல்லது காலை உடைப்பார்" என்று கலகலப்பாக பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com