ரன் எடுக்காத காரணத்தால் கே.எல்.ராகுலை நீக்கச் சொல்ல கூடாது - இந்திய முன்னாள் வீரர்


ரன் எடுக்காத காரணத்தால் கே.எல்.ராகுலை நீக்கச் சொல்ல கூடாது - இந்திய முன்னாள் வீரர்
x

Image Courtesy : IPL

ரன் எடுக்க தடுமாறி வரும் கே.எல்.ராகுலை அணியில் இருந்து நீக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வருகின்றன.

புதுடெல்லி,

30 வயதான கே.எல்.ராகுல், இந்திய அணிக்காக இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 81 இன்னிங்ஸில் 2,642 ரன்கள் குவித்துள்ளார். இதில் 13 அரைசதம் மற்றும் 7 சதங்கள் அடங்கும். இருந்தபோதும் கடந்த ஓராண்டு காலமாக அவர் சரிவர ஆடுவதில்லை.

கடந்த 2022 முதல் அண்மையில் முடிந்த டெல்லி டெஸ்ட் போட்டி வரையில் ராகுல் மொத்தம் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 11 இன்னிங்சில் ஆடியுள்ள அவர் அதில் முறையே 50, 8, 12, 10, 22, 23, 10, 2, 20, 17, 1 ரன்களை அவர் எடுத்துள்ளார்.

இதனால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் எனவும், அவருக்கு பதிலாக சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்தச் சூழலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் அவர் இடம் பிடித்துள்ளார். அது குறித்து பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கே.எல்.ராகுல் ரன் எடுக்கவில்லை என்ற காரணத்திற்காக அவர் அணியில் இருந்து நீக்க சொல்லக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணியின் ஆலோசகராக கம்பீர் உள்ளார். இதே அணியின் கேப்டனாக ராகுல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் கூறும் போது,

இந்திய அணியில் இருந்து ராகுலை நீக்க கூடாது. ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் சில இடங்களில் ரன் சேர்க்க தடுமாறுவார்கள். ராகுல் சிறப்பாக ஆடவில்லை என எந்தவொரு கிரிக்கெட் வல்லுனரோ அல்லது வேறு யாரேனும் ஒருவரோ சொல்லி, அவரை அணியில் இருந்து நீக்க கூடாது.

திறன் கொண்ட வீரர்களை ஆதரிக்க வேண்டும். ரோகித் சர்மாவை பாருங்கள். அவர் தனது கிரிக்கெட் கேரியரை தொடங்கிய விதத்தை பாருங்கள். அவர் லேட்டாகதான் ரன் குவிக்க தொடங்கினார். அவரது அப்போதைய, இப்போதைய ஆட்டத்தை ஒப்பிட்டு பாருங்கள். அவரது திறனை அறிந்து ஆதரித்தோம். இப்போது அபாரமாக ரன் குவித்து வருகிறார். அதை போலவே ராகுலும் விளையாடுவார், ரன் குவிப்பார்.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. 0-2 என்ற கணக்கில் அல்ல. அதனால் அணியில் யாரையும் நீக்க வேண்டாம் என முடிவு செய்து, அணியின் செயல்பாட்டை ஊக்குவித்து வருகிறார்கள். இந்திய அணி நிர்வாகம் சரியான நேரத்தில் ராகுலை ஆதரித்து வருகிறது என கருதுகிறேன். ராகுல் சிறந்த வீரர். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் ரன் சேர்த்துள்ளதை நாம் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story