தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் 'டிரா'- தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா...!


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் டிரா- தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா...!
x

Image Courtesy: AFP 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளை இழந்த தென் ஆப்பிரிக்கா அணி 0-2 என்ற கணக்கில் தொடரை ஏற்கனவே இழந்து விட்டது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 4ம் தேதி சிட்னியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன் படி முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 131 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 475 ரன்கள் குவித்தது. அந்த அணி தரப்பில் கவாஜா ஆட்டம் இழக்காமல் 195 ரன்களும், ஸ்மித் 104 ரன்களும் அடித்தனர்.

அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 108 ஓவர் முடிவில் 255 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது. அந்த அணி தரப்பில் கேசவ் மகராஜ் 53 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹேஸ்லேவுட் 4 விக்கெட், கம்மின்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து பாலோ ஆன் வழங்கிய ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவை பேட் செய்ய பணித்தது.

இதையடுத்து 220 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா தோல்வியை தடுக்க ஆடியது. அந்த அணியின் கேப்டன் எல்கர் 10 ரன்னிலும், ஹென்ரிஸ் கிளாசென் 35 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் அந்த அணி 41.5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. அந்த அணி தரப்பில் சாரெல் எர்வீ 42 ரன்னுடனும், டெம்பா பவுமா 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த போட்டி டிராவில் முடித்து கொள்ளப்பட்டதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் தென் ஆப்பிரிக்கா இந்த தொடரை இழந்ததன் மூலம் அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Next Story