கடைசி டெஸ்ட் போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று 3-வது நாள் ஆட்டம்
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 480 ரன்கள் குவித்தது.
ஆமதாபாத்,
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தொடக்க நாளில் 4 விக்கெட்டுக்கு 255 ரன்கள் எடுத்திருந்தது. உஸ்மான் கவாஜா (104 ரன்), ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் (49 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்று ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். ஜடேஜா- அக்ஷர் பட்டேல் கூட்டணி சுழல் தாக்குதலை தொடுத்தது. அவசரப்படாமல் நிதானம் காட்டிய கவாஜா- கிரீன் ஜோடியினர் முதல் 10 ஓவர்களில் 14 ரன் மட்டுமே எடுத்தனர். ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை.
தங்களை வலுப்படுத்திக் கொண்ட பிறகு ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு ஓட விட்டனர். உமேஷ் யாதவின் ஒரே ஓவரில் கிரீன் 3 பவுண்டரி விளாசினார். மதிய உணவு இடைவேளை வரை இவர்களின் ஆதிக்கத்தை இந்திய பவுலர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அபாரமாக ஆடிய கேமரூன் கிரீன் பவுண்டரி அடித்து தனது முதலாவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். இந்தியாவில் தனது கன்னி சதத்தை ருசித்த 6-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
அணியின் ஸ்கோர் 378-ஆக உயர்ந்த போது ஒரு வழியாக இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பிரித்தார். அவர் லெக்சைடில் வீசிய பந்தை கேமரூன் கிரீன் (114 ரன், 170 பந்து, 18 பவுண்டரி) முட்டிப்போட்டு அடிக்க முயற்சித்த போது, பந்து அவரது கையுறையில் உரசிக் கொண்டு விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத்திடம் கேட்ச்சாக சிக்கியது.
கவாஜா-கிரீன் இணை 5-வது விக்கெட்டுக்கு 208 ரன்கள் திரட்டியது. இந்திய மண்ணில் 1979-ம் ஆண்டுக்கு பிறகு இரட்டை செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் ஆஸ்திரேலிய ஜோடி இவர்கள் தான். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (0), மிட்செல் ஸ்டார்க் (6 ரன்) அஸ்வின் சுழலில் வீழ்ந்தனர். மறுமுனையில் தனது முதலாவது இரட்டை சதத்தை நோக்கி பயணித்த கவாஜா 180 ரன்களில் (422 பந்து, 21 பவுண்டரி) அக்ஷர் பட்டேலின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் அவுட் கொடுக்க மறுத்தார். பிறகு டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்து இந்திய வீரர்கள் சாதகமான தீர்ப்பை பெற்றனர். அந்த சமயம் ரோகித் சர்மா வெளியில் இருந்ததால் புஜாரா கேப்டனாக செயல்பட்டதுடன், அவரே டி.ஆர்.எஸ். கேட்டது கவனிக்கத்தக்க அம்சமாகும். இதன் மூலம் கவாஜாவின் 10 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.
கடைசி கட்டத்தில் டாட் மர்பியும், நாதன் லயனும் இந்திய பவுலர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொல்லை கொடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் 450-ஐ கடக்க வைத்தனர். மர்பி 41 ரன்களும் (61 பந்து,5 பவுண்டரி) நாதன் லயன் 34 ரன்களும் (96 பந்து, 6 பவுண்டரி) எடுத்து அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.
முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 167.2 ஓவர்களில் 480 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இந்தியாவில் ஒரு டெஸ்டில் முதல் இன்னிங்சில் 479 ரன்னுக்கு மேல் எடுத்த எந்த அணியும் இதுவரை தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 6 விக்கெட்டுகளை அள்ளினார். அவர் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் எடுப்பது இது 32-வது முறையாகும்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஆட்ட நேர முடிவில் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா 17 ரன்களுடனும், சுப்மன் கில் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.