நீங்கள் கடந்து வந்த பாதையை என்றும் மறந்து விடக்கூடாது - மாணவர்களுக்கு நடராஜன் அறிவுரை


நீங்கள் கடந்து வந்த பாதையை என்றும் மறந்து விடக்கூடாது - மாணவர்களுக்கு நடராஜன் அறிவுரை
x

ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடும்போது இந்தி தெரியாமல் கஷ்டப்பட்டதாக தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

சேலம்,

இந்திய கிரிக்கெட் வீரரான தமிழகத்தை சேர்ந்த நடராஜன், சேலத்தில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெற்று, பல்வேறு கருத்துகளை மாணவர்களுடன் பேசினார். அப்போது எவ்வளவு உயரத்திற்கு போனாலும் தன்னடக்கத்தை மறக்கக்கூடாது என்று நடராஜன் வலியுறுத்தினார்.

மேலும் ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடும்போது இந்தி தெரியாமல் கஷ்டப்பட்டதாக தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நம்மால் இதை செய்ய முடியுமா என்று நினைத்தால் நிச்சயமாக உங்களால் செய்ய முடியாது. சாதாரண ஒரு கிராமத்தில் பிறந்து இன்று இந்த அளவுக்கு வந்திருக்கிறேன் என்றால் என்னுடைய தன்னம்பிக்கையும் உழைப்பும்தான் காரணம். இதேபோல் நீங்கள் பெரிய இடத்திற்கு வந்து விட்டால், நீங்கள் கடந்து வந்த பாதையை என்றும் மறந்து விடக்கூடாது. தான் நன்றி மறவாமல் இருப்பதால்தான் இவ்வளவு நல்ல உள்ளங்களை சம்பாதித்து இருக்கின்றேன். என் உடை மாறலாம். அதற்கு காரணம், நான் செல்லும் இடங்களுக்கு ஏற்ப நான் உடையை போட்டுக் கொள்கின்றேன். எனினும் நான் என்றுமே பழசை மறக்க மாட்டேன்.

நீங்களும் இந்த நல்ல குணத்தை கல்லூரி பருவத்திலே விதைத்துக் கொள்ளுங்கள். இதைப்போன்று பஞ்சாப் அணிக்கு முதன் முதலில் நான் செல்லும்போது இந்தி தெரியாமல் கஷ்டப்பட்டேன். எனக்கு இந்தி தெரியாததால் நான் அங்கு தனிமையை உணர்ந்தேன். இன்னும் சொல்லப் போனால் எனக்கு தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. அங்கு இருந்த ஸ்ரீதர் என்ற பயிற்சியாளர் மட்டும்தான் என்னுடன் தமிழில் பேசி எனக்கு உதவினார். அப்போது சேவாக்கும் எனக்கு துணையாக நின்றார். இந்தி தெரியவில்லை என்பதால் நான் சோர்ந்து போகவில்லை. எனவே மாணவர்கள் இளம்பருவத்திலே பல மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும்" என்று அறிவுரை வழங்கினார்.

1 More update

Next Story