'மாஸ்டர் ஆப் ஸ்பின்' அஸ்வினை பாராட்டிய ரிக்கி பாண்டிங்


மாஸ்டர் ஆப் ஸ்பின் அஸ்வினை பாராட்டிய ரிக்கி பாண்டிங்
x

ரவிச்சந்திரன் அஸ்வினை மாஸ்டர் ஆப் ஸ்பின் என்று ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், தனது 100-வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இன்று களமிறங்கியுள்ளார். உள்ளூர் மற்றும் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடி தோனி தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அசத்தத் துவங்கிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அந்த வகையில் இந்தியாவுக்காக 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் முதல் தமிழக வீரர் என்ற மாபெரும் சாதனை படைத்துள்ள அஸ்வின் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 'மாஸ்டர் ஆப் ஸ்பின்' என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார். மேலும் ஐ.பி.எல். தொடரில் சில வருடங்கள் டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்தபோது அஸ்வின் எப்போதும் வித்தியாசமானவற்றை செய்ய முயற்சித்ததாகவும் பாண்டிங் தெரிவித்துள்ளார். அப்படி அனுபவத்தால் முன்னேறி 100 டெஸ்ட் போட்டியில் விளையாடும் அஸ்வினுக்கு அவர் பாராட்டு தெரிவித்தது பின்வருமாறு:-

"எந்த வகையான சூழ்நிலையிலும் அஸ்வின் மாஸ்டர் ஆப் ஸ்பின். டெல்லி அணியில் சில வருடங்கள் அவருக்கு பயிற்சியாளராக செயல்படும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவருடன் வேலை செய்ததை நான் விரும்பினேன். அவர் எப்போதுமே தன்னுடைய வழியில் ஏதாவது வித்தியாசமாக செய்வார். அதே சமயம் அவர் ஒரு பவுலராகவும் தொடர்ந்து முன்னேறினார்.

அதுவே அவரைப் பற்றி நான் விரும்பும் விஷயமாகும். நான் பயிற்சியாளராக இருந்தபோது அவர் தன்னுடைய பவுலிங் ஆக்சன் அல்லது பந்தை பிடிக்கும் விதம் அல்லது வித்தியாசமாக பந்து வீசுவது போன்றவற்றில் எப்போதும் சில மாற்றங்களை செய்ய முயற்சிப்பதை பார்த்துள்ளேன். அவர் சிறந்து விளங்குவதற்கான வழிகளை கண்டறிவதற்கு எப்போதுமே தயாராக இருப்பவர்" என்று கூறினார்.


Next Story