' உலகக்கோப்பை அணியில் சாஹல் இல்லாதது ஆச்சரியம் அளிக்கிறது'- இந்திய முன்னாள் வீரர்


 உலகக்கோப்பை அணியில் சாஹல் இல்லாதது ஆச்சரியம் அளிக்கிறது- இந்திய முன்னாள் வீரர்
x

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

புது டெல்லி,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் எதிர்கொள்கிறது.

நேற்று இலங்கையின் கண்டியில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுடன் பிசிசிஐ தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்தார். ரோகித் சர்மா தலைமையிலான அணியில் ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த வீரர்களில் இருந்து திலக் வர்மா, சஞ்சு சாம்சன், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் நீக்கப்பட்டு மீதமுள்ள 15 வீரர்கள் உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பின்வரிசை வீரர்களும் ரன்கள் அடிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் யுஸ்வேந்திர சாஹலை சேர்க்காத முடிவு ஆச்சரியமாக இருக்கிறது என தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

"யுஸ்வேந்திர சாஹல் இந்திய உலகக்கோப்பை அணியில் இடம் பெறாதது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. அவர் ஒரு தரமான மேட்ச் வின்னர்" என்று பதிவிட்டுள்ளார்.

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் தாகூர், ஷர்துல் தாக்கூர். , முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.


Next Story