கனவு நினைவானதில் மிகவும் மகிழ்ச்சி - ஆகாஷ் தீப்


கனவு நினைவானதில் மிகவும் மகிழ்ச்சி - ஆகாஷ் தீப்
x

image courtesy; PTI

தினத்தந்தி 12 Feb 2024 8:00 AM GMT (Updated: 12 Feb 2024 8:05 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் ஆகாஷ் தீப் இடம்பெற்றுள்ளார்.

புதுடெல்லி,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடரில் எஞ்சியுள்ள 3 போட்டிகளுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் இடம்பெற்றுள்ளார்.

ஐபிஎல் தொடரில் கடந்த 2022-ம் ஆண்டு பெங்களூரு அணிக்காக அறிமுகமான ஆகாஷ் தீப் அந்த தொடரில் பெரியளவில் கவனத்தை ஈர்க்கவில்லை என்றாலும் உள்ளூர் போட்டிகளில் பெங்கால் அணிக்காக மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். அதுமட்டும் இன்றி இந்தியா ஏ அணிக்காகவும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.

இதன் காரணமாக அவருக்கு தென் ஆப்பிரிக்க தொடரின்போதே இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவருக்கு அந்த தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வாகியுள்ள அவருக்கு நிச்சயம் இந்த 3 போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஆகாஷ் தீப் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில்;- 'இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டதை நினைத்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் சிறப்பாக செயல்பட்டதை தேர்வுக்குழுவினர் பார்த்திருக்கின்றனர். அவர்களது பார்வை என் மீது விழுந்ததாலே தற்போது நான் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்து விளையாடியபோது சிறப்பாக பந்து வீசியதோடு பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டேன். தேசிய அணிக்காக விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும். அந்த வகையில் தற்போது அந்த கனவு எனக்கு நினைவாக போவதில் மிகவும் மகிழ்ச்சி.

என்மீது நம்பிக்கை வைத்து என்னை தேர்வு செய்த தேர்வுக்குழுவினருக்கும், நிர்வாக உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயம் உள்ளூர் போட்டிகளில் எவ்வாறு என்னால் சிறப்பாக செயல்பட முடிந்ததோ அதேபோன்று இந்திய அணிக்காகவும் எனது முழு பங்களிப்பை வழங்கி இந்திய அணியின் வெற்றிக்கு உதவுவேன்' என்று கூறினார்.


Next Story