டி20 உலகக்கோப்பை; பயிற்சி ஆட்டங்கள் குறித்த அட்டவணை வெளியீடு - இந்தியாவுக்கு எத்தனை ஆட்டங்கள் தெரியுமா..?


டி20 உலகக்கோப்பை; பயிற்சி ஆட்டங்கள் குறித்த அட்டவணை வெளியீடு - இந்தியாவுக்கு எத்தனை ஆட்டங்கள் தெரியுமா..?
x

image courtesy:AFP

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி தொடங்குகிறது.

துபாய்,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. இந்த அணியில் பேட்ஸ்மேன்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரும், விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சனும், ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்த தொடரில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் 2 கட்டங்களாக பயணிக்க உள்ளனர். இந்தியாவில் தற்போது ஐ.பி.எல். தொடர் நடந்து வருவதால் அதில் லீக் சுற்றுடன் வெளியேறிய அணிகளில் உள்ள வீரர்கள் முதற்கட்டமாகவும், மீதமுள்ள வீரர்கள் தொடர் நிறைவடைந்ததும் அமெரிக்கா செல்ல உள்ளனர்.

டி20 உலக்கோப்பை தொடரை முன்னிட்டு பயிற்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில் பயிற்சி ஆட்டங்களுக்கான போட்டி அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 27ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை மொத்தம் 16 பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் மொத்தம் 17 அணிகள் பயிற்சி ஆட்டங்களில் ஆட உள்ளன.

பயிற்சி ஆட்டங்கள் டெக்சாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி கிரிக்கெட் ஸ்டேடியம், புளோரிடாவில் உள்ள ப்ரோவர்ட் கவுண்டி ஸ்டேடியம், குயின்ஸ் பார்க் ஓவல் மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமியில் நடைபெற உள்ளன.

இந்திய அணி ஒரே ஒரு பயிற்சி போட்டியில் மட்டுமே விளையாட உள்ளது. அதன்படி இந்திய அணி ஜூன் 1ம் தேதி வங்காளதேசத்துடன் ஆட உள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் பயிற்சி ஆட்டங்களில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story