அவர் கொடுத்த அதிரடியான துவக்கத்தினாலேயே எங்களால் எளிதாக வெற்றி பெற முடிந்தது - தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம்

இந்தியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
Image Courtesy: Twitter
Image Courtesy: Twitter
Published on

கெபேஹா,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டிஎல்எஸ் முறையில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 19.3 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்திருந்தபோது மழை வந்ததால் அத்துடன் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

இந்திய அணி தரப்பில் ரிங்கு சிங் 68 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 56 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து டிஎல்எஸ் முறையில் 15 ஓவர்களில் 152 ரன்கள் எடுக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்காவுக்கு இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்கா 13.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் கொடுத்த அதிரடியான துவக்கத்தினாலேயே எங்களால் எளிதாக வெற்றி பெற முடிந்தது என தென் ஆப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறியுள்ளார். போட்டி முடிந்த பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

இந்த போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. டி20 கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் எவ்வளவு பந்துகளை பிடித்து விளையாடுகிறாரோ அதே அளவுக்கு அதிரடியாக ரன்களை குவிக்க முடியும்.

அந்த வகையில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் மிகச் சிறப்பான அதிரடி தொடக்கத்தை வழங்கினார். பேட்டிங் துறையில் அவர் கேப்டன் பொறுப்பை ஏற்று செயல்பட்டது போல் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்றைய போட்டியில் அவர் கொடுத்த அதிரடி துவக்கத்தினாலேயே எங்களால் எளிதாக வெற்றி பெற முடிந்தது.

டி20 உலகக்கோப்பை தொடரானது இன்னும் சில மாதங்களில் வர இருப்பதால் ஒவ்வொரு வீரருமே தங்களது இடத்திற்காக சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். அந்த வகையில் சிறப்பாக செயல்படும் வீரர்களையே நாங்கள் உலகக்கோப்பை அணிக்காக தேர்வு செய்வோம். எனவே இது எங்களுக்கு ஒரு ஆரோக்கியமான போட்டி. இவ்வாறு கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com