ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: வீரர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள்


ஆசிய சாம்பியன்ஸ்  கோப்பை ஆக்கி: வீரர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள்
x
தினத்தந்தி 13 Aug 2023 6:36 AM GMT (Updated: 13 Aug 2023 6:45 AM GMT)

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னை,

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-மலேசியா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி 4-வது முறையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

இந்த தொடரில் வீரர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் விவரம் பின்வருமாறு:-

சிறந்த கோலுக்கான விருது; இந்திய அணிக்காக களத்தில் சிறப்பாக செயல்பட்டு கோல் அடித்த தமிழக வீரர் செல்வம் கார்த்திக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

அதிக கோல்கள் அடித்த அணி விருது; இந்த தொடரில் தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியே இந்த விருதை தட்டிச் சென்றது. இந்திய அணி இந்த தொடரில் அதிகபட்சமாக 29 கோல்கள் அடித்தது.

வளர்ந்து வரும் வீரர் விருது; பாகிஸ்தான் அணியை சேர்ந்த அப்துல் சாகித் வளர்ந்து வரும் இளம் வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவர் இந்த தொடரில் நன்றாக விளையாடினார். மேலும் பாகிஸ்தான் அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி 2 கோல்கள் அடித்தார்.

வளர்ந்து வரும் கோல் கீப்பர் விருது; ஜப்பான் அணி இந்த தொடரில் 3ஆம் இடம் பிடிக்க முக்கிய பங்கு வகித்த அந்த அணியின் இளம் கோல் கீப்பர் டகுமி கிடகவா இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். கடினமான தருணத்திலும் பொறுமையாக செயல்பட்டு அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்,

தொடரின் சிறந்த கோல் கீப்பர் விருது; இந்த தொடரில் வீரர்கள் இலக்கை நோக்கி அடித்த ஷாட்களை அற்புதமாக தடுத்து தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட கொரிய கோல் கீப்பர் கிம் ஜெய்ஹியோனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

அதிக கோல் அடித்தவர் விருது; இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங்கிற்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த தொடரில் அவர் 9 கோல்கள் அடித்தார்.

தொடர் நாயகன் விருது; களத்தில் பொறுப்புடனும், வீரர்களை முன்னின்று வழிநடத்திய இந்திய அணியின் ஆல்ரவுண்டர் மந்தீப் சிங் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் அவர் 3 கோல்கள் அடித்தார்.

மேலும் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.1.10 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story