ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 6-வது தங்கப்பதக்கம்


ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 6-வது தங்கப்பதக்கம்
x

image credit: @jindadilkashmir

ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று இந்தியா 6-வது தங்கப்பதக்கத்தை துப்பாக்கி சுடுதலில் கைப்பற்றியது.

ஹாங்சோவ்,

துப்பாக்கி சுடுதலில் அசத்தல்

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டி தொடரில் 6-வது நாளான நேற்று நடந்த துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் அணிகள் பிரிவில் சரப்ஜோத் சிங், அர்ஜூன் சிங் சீமா, ஷிவா நார்வால் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1734 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. ஒரு புள்ளி வித்தியாசத்தில் பின்தங்கிய சீனா (1733 புள்ளி) வெள்ளிப்பதக்கத்தையும், வியட்நாம் (1730 புள்ளி) வெண்கலப்பதக்கத்தையும் வென்றன. துப்பாக்கி சுடுதலில் இந்தியா பெற்ற 4-வது தங்கம் இதுவாகும். மொத்தத்தில் நடப்பு தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 6-வது தங்கப்பதக்கமாகும்.

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் தனிநபர் பிரிவின் தகுதி சுற்றில் இந்திய வீரர்கள் சரப்ஜோத் சிங் 5-வது இடமும், அர்ஜூன் சிங் சீமா 8-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர். 14-வது இடத்துக்கு தள்ளப்பட்ட மற்றொரு இந்திய வீரர் ஷிவா நார்வால் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறினார். 8 பேர் இடையிலான இறுதி சுற்று முடிவில் சரப்ஜோத் சிங் (199 புள்ளி) 4-வது இடமும், அர்ஜூன்சிங் சீமா (113.3 புள்ளி) 8-வது இடமும் பிடித்து ஏமாற்றம் அளித்தனர்.

ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அனந்த் ஜீத் சிங் நருகா, கனேமட் செகோன் இணை (138 புள்ளி) 7-வது இடம் பெற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

உசூ போட்டியில் வெள்ளி

தற்காப்பு கலையான உசூ போட்டியில் பெண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி 0-2 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் வூ ஜியாவோயிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். பதக்கம் வென்ற ரோஷிபினா தேவி கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

வெற்றிக்கு பிறகு ரோஷிபினா தேவி கூறுகையில், 'மணிப்பூர் பற்றி எரிகிறது. சண்டை நீடித்து கொண்டே இருக்கிறது. எனது கிராமத்துக்கு என்னால் செல்ல முடியாது. அங்கு எங்களை பாதுகாத்து கஷ்டங்களை அனுபவித்து வருபவர்களுக்கு இந்த பதக்கத்தை அர்ப்பணிக்க விரும்புகிறேன். சண்டை நின்று எப்போது இயல்பு வாழ்க்கை திரும்பும் என்பது தெரியவில்லை. விசா பிரச்சினை காரணமாக அருணாச்சலபிரதேச மாநிலத்தை சேர்ந்த உசூ வீராங்கனைகள் 3 பேர் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போனது வேதனை அளிக்கிறது' என்றார்.

குதிரையேற்றத்தில் வெண்கலம்

குதிரையேற்றம் போட்டியில் ஆண்களுக்கான டிரஸ்சேஜ் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் அனுஷ் அகர்வாலா (73.030 புள்ளி) வெண்கலப்பதக்கம் வென்றார். அவர் 2 நாட்களுக்கு முன்பு தங்கம் வென்று சாதனை படைத்த இந்திய குதிரையேற்ற அணியில் இடம்பிடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு இந்திய வீரர் ஹிரிடாய் விபுல் செடா இறுதி சுற்று வாய்ப்பை இழந்து நடையை கட்டினார்.

ஸ்குவாஷ் போட்டியில் ஆண்கள் அணிகள் பிரிவில் இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் நேபாளத்தை தோற்கடித்து தனது பிரிவில் முதலிடம் பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. இதேபோல் பெண்கள் பிரிவில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 0-3 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோற்றாலும் தனது பிரிவில் முதலிடத்துடன் அரைஇறுதியை எட்டியது. அரைஇறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்திய அணிகள் பதக்கத்தை உறுதி செய்தன.

டேபிள் டென்னிஸ்

டேபிள் டென்னிசில் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சரத்கமல் 11-9, 11-2, 11-7, 11-7 என்ற நேர்செட்டில் மாலத்தீவின் முகமது ஷப்பான் இஸ்மாயிலை தோற்கடித்து கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் சத்யன் 11-5, 11-6, 11-9, 11-2 என்ற நேர்செட்டில் சவுதி அரேபியாவின் துர்கி லாபி அல்முதாரியை விரட்டியடித்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 11-5, 11-4, 11-3, 11-2 என்ற நேர்செட்டில் நேபாளத்தின் நபிதா ஸ்ரீஷ்தாவை துவம்சம் செய்து கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் கால் பதித்தார்.

பேட்மிண்டனில் பெண்கள் அணிகள் பிரிவில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் மங்கோலியாவை ஊதித்தள்ளி கால்இறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணியில் பி.வி.சிந்து, அஷ்மிதா சாலிஹா, அனுபமா உபாத்யாயா ஆகியோர் தங்களது ஆட்டங்களில் எளிதில் வெற்றி கண்டனர். இன்று நடைபெறும் கால்இறுதியில் இந்திய அணி, தாய்லாந்தை சந்திக்கிறது.

கால்பந்தில் வெளியேற்றம்

ஆண்களுக்கான கால்பந்து போட்டியின் 2-வது சுற்றில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் சவுதிஅரேபியாவிடம் தோற்று நடையை கட்டியது.

ஆக்கியில் இந்திய அணி (ஏ பிரிவு) தனது 3-வது லீக்கில் 4-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்து 'ஹாட்ரிக்' வெற்றியுடன் அரைஇறுதி வாய்ப்பை நெருங்கியது.

டென்னிஸ் இரட்டையர் பிரிவில்

ராம்குமார் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஆசிய விளையாட்டு டென்னிஸ் போட்டியில் நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ராம்குமார் (தமிழ்நாடு)-சகெத் மைனெனி இணை 6-1, 6-7 (6-8), 10-0 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் செங்சான்ஹாங்-சோன்வோ கோன் ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் தங்கப்பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி, சீன தைபேயின் ஹூன் லி யா-ஷோ என் லியாங் இணையை எதிர்கொள்கிறது.

இதே போல் கலப்பு இரட்டையர் பிரிவின் கால்இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ருதுஜா போசேல் கூட்டணி 7-5, 6-3 என்ற நேர்செட்டில் கஜகஸ்தானின் ஜிபெக் குலாம்பாயேவா-ஜிகோரி லோமாகின் இணையை தோற்கடித்து அரைஇறுதியை எட்டியதுடன் குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தது.

தடகளம் இன்று தொடக்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் தடகள பந்தயங்கள் இன்று தொடங்கி அக்டோபர் 5-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா உள்பட 65 பேர் கொண்ட வலுவான இந்திய தடகள அணி களம் காணுகிறது. ஈட்டி எறிதலில் வீரர் நீரஜ் சோப்ரா, குண்டு எறிதல் வீரர் தஜிந்தர் பால் சிங் தூர், 3 ஆயிரம் ஸ்டீபிள் சேஸ் வீரர் அவினாஷ் சாப்லே ஆகியோர் தங்கப்பதக்கத்தை வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் இரு பிரிவிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. மேலும் எம்.ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), பிரவீன் சித்ரவேல் (டிரிபிள்ஜம்ப்), அஜய்குமார் சரோஜ் (1,500 மீட்டர் ஓட்டம்), ஜோதி யர்ராஜி (100 மீட்டர் ஓட்டம்), வித்யா ராம்ராஜ் (400 மீட்டர் ஓட்டம்) ஆகியோரும் பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்புள்ளது. கடந்த ஆசிய விளையாட்டில் தடகளத்தில் 20 பதக்கங்கள் (8 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம்) வென்ற இந்தியா இந்த முறை குறைந்தபட்சம் 25 பதக்கங்களுக்கு குறிவைத்துள்ளது.


Next Story