பாலியல் குற்றச்சாட்டு; நீதியை நிலைநாட்ட முழுமையான விசாரணையை உறுதி செய்வோம் - இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா


பாலியல் குற்றச்சாட்டு; நீதியை நிலைநாட்ட முழுமையான விசாரணையை உறுதி செய்வோம் - இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா
x

விளையாட்டு வீரர்களின் நலன் மற்றும் நல்வாழ்வு ஆகியவையே இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னுரிமை என்று பி.டி.உஷா தெரிவித்தார்.

புதுடெல்லி,

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத்தரும் விளையாட்டுகளில் ஒன்றாக மல்யுத்தம் விளங்குகிறது. இதுவரை ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியா 7 பதக்கங்களை வென்று இருக்கிறது. இதனால் இந்தியாவில் இப்போது கவனிக்கத்தக்க விளையாட்டுகளில் ஒன்றாக மல்யுத்தம் இருக்கிறது.

இந்த நிலையில் நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் 30 பேர் நேற்று முன்தினம் திடீரென டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் ரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களான பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ் போகத், சரிதா மோர், சங்கீதா போகத், அன்ஷூமாலிக், சத்யவார்த் மாலிக், ஜிதேந்தர் கின்ஹா, அமித் தன்கர், சுமித் மாலிக் ஆகியோரும் அடங்குவர்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக 2011-ம் ஆண்டில் இருந்து 66 வயதான பிரிஜ் பூஷன் ஷரண் சிங் இருந்து வருகிறார். இவர் பாரதீய ஜனதா கட்சி எம்.பி.யும் ஆவார். நீண்ட காலம் அந்த பொறுப்பில் இருக்கும் அவர் சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்கிறார், மல்யுத்த வீராங்கனைகளிடம் தவறாக நடந்து கொள்கிறார். அவரை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே மல்யுத்த வீரர்களின் கோரிக்கையாகும்.

இந்த குற்றச்சாட்டு குறித்து பிரிஜ் பூஷண் சிங் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும்போது, எந்த வீரரையாவது கூட்டமைப்பு துன்புறுத்தியது என கூற யாரேனும் முன்னே இருக்கிறார்களா? என கேட்டார். மேலும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்றும், அப்படி எதுவும் நடந்திருந்தால் தூக்கில் தொங்க தயார் என்றும் அவர் கூறினார்.

அதே சமயம் வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு பற்றி 72 மணி நேரத்தில் பதிலளிக்க மல்யுத்த கூட்டமைப்புக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா, இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் என்ற முறையில், மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டு குறித்து உறுப்பினர்களுடன் விவாதித்து வருகிறேன். விளையாட்டு வீரர்களின் நலன் மற்றும் நல்வாழ்வு ஆகியவையே இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னுரிமையாகும்.

விளையாட்டு வீரர்கள் முன் வந்து தங்கள் கவலைகளை எங்களுடன் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நீதியை உறுதிப்படுத்த முழுமையான விசாரணையை உறுதி செய்வோம். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இதுபோன்ற சூழ்நிலைகளை விரைவாகச் சமாளிக்க சிறப்புக் குழுவை அமைக்கவும் முடிவு செய்துள்ளோம்."

இவ்வாறு பி.டி.உஷா தெரிவித்துள்ளார்.



Next Story