காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்


காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 July 2023 4:57 PM GMT (Updated: 7 July 2023 5:40 PM GMT)

வேலூர் மற்றும் குடியாத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்

சாலை மறியல்

பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி குஜராத் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருந்தார். இந்த மேல் முறையீட்டு மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி வேலூர் மாநகர மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமையில் நேற்று வேலூர் அண்ணாசாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாநில எஸ்.சி. எஸ்.டி. பிரிவு துறை பொதுச்செயலாளர் சித்தரஞ்சன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் வாஹித்பாஷா, மண்டல தலைவர்கள் ரகு, மனோகரன், அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் 25 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

இதையடுத்து மறியல் நடந்த இடத்துக்கு பெண் நிர்வாகி ஒருவர் வந்தார். அவர் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் செய்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குடியாத்தம்

வேலூர் மாவட்ட காங்கிரஸ் காட்சி சார்பில் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, குடியாத்தம் நகர தலைவர் விஜயன், பேரணாம்பட்டு நகர தலைவர் முஜம்மில் அகமது, வட்டார தலைவர்கள் வீராங்கன், சங்கர், நித்தியானந்தம், தாண்டவமூர்த்தி, பெரியசாமி, தனசேகர் உள்பட ஏராளமானோர் சாலை மறியலில் கலந்துகொண்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீசார் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த மறியலால் பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story