அமெரிக்க ஓபன் டென்னிஸ்:3-வது சுற்றில் ஜோகோவிச், ஸ்வியாடெக்..!! இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி வெற்றி..!!


அமெரிக்க ஓபன் டென்னிஸ்:3-வது சுற்றில் ஜோகோவிச், ஸ்வியாடெக்..!! இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி வெற்றி..!!
x
தினத்தந்தி 1 Sep 2023 5:07 AM GMT (Updated: 1 Sep 2023 5:19 AM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், ஸ்வியாடெக் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

நியூயார்க்,

சிட்சிபாஸ், கேஸ்பர் ரூட் தோல்வி

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-4, 6-1, 6-1 என்ற நேர்செட்டில் 76-ம் நிலை வீரரான பெர்னாபி ஜபடா மிராலிஸ்சை (ஸ்பெயின்) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 7-வது இடம் வகிக்கும் சிட்சிபாஸ் (கிரீஸ்) 5-7, 7-6 (7-2), 7-6 (7-5), 6-7 (6-8), 3-6 என்ற செட் கணக்கில் தகுதி சுற்று மூலம் நுழைந்த நியூசிலாந்து வீரர் டொமினிக் ஸ்டிரிக்கரிடம் போராடி அடங்கினார். இந்த ஆட்டம் 4 மணி 4 நிமிடம் நீடித்தது. இதே போல் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள கேஸ்பர் ரூட் (நார்வே) 4-6, 7-5, 2-6, 6-0, 2-6 என்ற செட் கணக்கில் 67-ம் நிலை வீரரான ஜாங் ஜிஜென்னிடம் (சீனா) அதிர்ச்சிகரமாக தோற்றார். சீன வீரர் ஒருவர் உலக தரவரிசையில் டாப்-5 இடங்களுக்குள் இருக்கும் வீரரை வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும்.

மற்ற ஆட்டங்களில் பிரான்சிஸ் டியாயோ, டாமி பால், பென் ஷெல்டன், டெய்லர் பிரிட்ஸ் (4 பேரும் அமெரிக்கா), அஸ்லான் கரட்சேவ் (ரஷியா), டேவிடோவிச் போகினா (ஸ்பெயின்), அட்ரியன் மன்னரினோ (பிரான்ஸ்), ஜிரி வெஸ்லி (செக்குடியரசு) ஆகியோரும் வெற்றி பெற்று 3-வது சுற்றை எட்டினர்.

ஸ்வியாடெக் அபாரம்

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் டாரியா சாவிலியை (ஆஸ்திரேலியா) வெளியேற்றி 3-வது சுற்றை எட்டினார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 7-5, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் 11-ம் நிலை வீராங்கனை பெட்ரா கிவிடோவாவை (செக்குடியரசு) வீழ்த்தினார். முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்), 19-ம் நிலை வீராங்கனை ஹடட் மையா (பிரேசில்) ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அளித்தனர்.

எலினா ரைபகினா (கஜகஸ்தான்), ஆஸ்டாபென்கோ (லாத்வியா), எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்), ஜெனிபர் பிராடி (அமெரிக்கா), சோரனா கிறிஸ்டி (ருமேனியா), கரோலினா முச்சோவா (செக்குடியரசு) ஆகியோரும் தங்களது 2-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

போபண்ணா ஜோடி வெற்றி

ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) இணை 6-4, 6-2 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபர் ஓகான்னெல்-அலெக்சாண்டர் வுகிச் கூட்டணியை எளிதில் தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. இந்த வெற்றியை பெற ரோகன் போபண்ணா ஜோடிக்கு 55 நிமிடங்களே தேவைப்பட்டது.


Next Story