பரவலான தொழில் வளர்ச்சியை கொண்டுவரும் முதலீட்டாளர்கள் மாநாடு


பரவலான தொழில் வளர்ச்சியை கொண்டுவரும் முதலீட்டாளர்கள் மாநாடு
x

சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது.

சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகள் பங்குபெற்றுள்ளன. 450-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்துகொண்டு இருக்கிறார்கள். முதல்நாளான நேற்று வெளிநாட்டு முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளும், நம் நாட்டு தொழில்முனைவோரும் காட்டிய ஆர்வத்தைப் பார்த்தால், தமிழக அரசின் இலக்கான ரூ.5½ லட்சம் கோடிக்கான முதலீட்டை தாண்டிவிடும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. தொடக்க நிகழ்ச்சியிலேயே ரூ.51 ஆயிரத்து 754 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இது தமிழ்நாட்டில் நடக்கும் 3-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடாகும். முதல் மாநாடு ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது 2015-ம் ஆண்டு நடந்தது. அப்போது 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும், 4 லட்சத்து 70 ஆயிரத்து 65 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் பெருமையுடன் அறிவிக்கப்பட்டது. 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது 2019-ம் ஆண்டு நடந்தது. அப்போது, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.3 லட்சத்து 501 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், 10 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த இரு மாநாடுகளிலும் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் தொழில் முதலீடுகளாக மாறவில்லையென்றாலும், பல தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு வந்தவுடன் ஆரம்பத்தில் இருந்தே தொழில் வளர்ச்சிக்கு மிகதீவிர நடவடிக்கை எடுத்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் மற்றும் சில நாடுகளுக்கு நேரடியாக சென்று தொழில்முனைவோரை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலைகளை விளக்கிக்கூறி பல முதலீடுகளை கொண்டுவந்தார். இதுபோல, முன்பு தொழில்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் தங்கம் தென்னரசும், இப்போது அமைச்சராக இருக்கும் டி.ஆர்.பி.ராஜாவும் சீரிய முயற்சிகளை எடுத்தனர்.

மேலும், முன்பு தொழில்துறை செயலாளர்களாக இருந்த எஸ்.கிருஷ்ணன், முருகானந்தம், இப்போது செயலாளராக இருக்கும் அருண்ராய் ஆகியோர் மிக முனைப்புடன் முயற்சிகளை எடுத்தனர். இவ்வாறு அனைவரும் எடுத்த கூட்டுமுயற்சிகளின் விளைவாக 241 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, ரூ.3 லட்சம் கோடி அளவில் தொழில்முதலீடுகளை ஈர்த்துள்ளன. 4 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. பொதுவாக, இதுவரை எடுத்த முயற்சிகளால், பெரும்பாலும் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களிலேயே தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. ஆனால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலான தொழில்வளர்ச்சி ஏற்படவேண்டும், அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட வேண்டும், அதற்கு இந்த முதலீட்டாளர் மாநாடு வித்திட வேண்டும் என்று நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அதன் விளைவாக, தூத்துக்குடியில் வியட்நாம் நாட்டை சேர்ந்த 'வின்பாஸ்ட்' நிறுவனம் மின்சார வாகன தொழிற்சாலையை ரூ.16 ஆயிரம் கோடி முதலீட்டில் தொடங்கப்போகிறது. இதன்மூலம் அந்த தொழிற்சாலைக்கு தேவையான உதிரிபாகங்களை தயாரித்து கொடுக்கும் பல சிறிய தொழிற்சாலைகளும் அப்பகுதியில் வரும். இதுபோல, இந்தியாவின் பல முன்னணி தொழில்நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் பரவலாக தொழில் தொடங்கப்போவதால், இந்த மாநாடு ஒரு தொழில்புரட்சிக்கு அடிப்படையாக அமையும்.


Next Story