மலாடில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் மீட்பு

மலாடில் 3 வயது சிறுவனை கடத்தி பணம் பறிக்க முயன்ற காவலாளியை போலீசார் விசாரணை நடத்தி 17 மணி நேரத்தில் தகிசரில் வைத்து கைது செய்தனர்.
மலாடில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் மீட்பு
Published on

மும்பை, 

மலாடில் 3 வயது சிறுவனை கடத்தி பணம் பறிக்க முயன்ற காவலாளியை போலீசார் விசாரணை நடத்தி 17 மணி நேரத்தில் தகிசரில் வைத்து கைது செய்தனர்.

பணம் பறிக்க திட்டம்

மும்பை மலாடு கிழக்கு நாதியாட்வாலா காம்பவுண்ட் பகுதியில் கட்டுமான நிறுவனம் ஒன்று புதிதாக கட்டிடம் கட்டும் பணியை நடத்தி வருகிறது. அங்கு காவலாளியாக முகேஷ் சிங் (வயது26) என்பவர் கடந்த 4 ஆண்டாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் அதற்காக பணம் இல்லாமல் திண்டாடி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு வேலை பார்த்து வரும் மேற்பார்வையாளரிடம் இருந்து பணம் பறிக்க திட்டம் போட்டார்.

சிறுவன் கடத்தல்

கடந்த 17-ந்தேதி இரவு 8 மணி அளவில் மேற்பார்வையாளரின் 3 வயது மகன் அங்கு விளையாடி கொண்டிருந்தான். இதனை கண்ட காவலாளி முகேஷ் சிங் சாக்லேட், பிஸ்கட் வாங்கி தருவதாக கூறி அங்கிருந்து அழைத்து சென்றார். இரவு 10 மணி ஆன நிலையில் சிறுவனின் பெற்றோரான மேற்பார்வையாளருக்கு அழைப்பு விடுத்த காவலாளி, உங்களது மகனை கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ.50 ஆயிரம் தந்தால் சிறுவனை உயிருடன் விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

இதனால் அவர்கள் மலாடு போலீசில் புகார் அளித்தனர்.

தகிசரில் சிக்கினார்

இந்த புகாரின் படி போலீசார் காவலாளியின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க செல்போன் அலைவரிசை மூலம் விசாரணை நடத்தினர். இதில் முடியாமல் போனதால் அவரது நண்பரின் உதவியுடன் தொடர்பு கொள்ள முயன்றனர். இதில் முகேஷ் சிங்கின் நடமாட்டத்தை அறிந்த போலீசார் தகிசர் தத்தாபாடா பகுதியில் சிறுவனுடன் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து கைது செய்தனர்.

கடத்தப்பட்ட 3 வயது சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட முகேஷ் சிங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

சம்பவம் நடந்து 17 மணி நேரத்தில் சிறுவனை கடத்தி சென்ற காவலாளி போலீசாரிடம் பிடிபட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com