கீழக்குறிச்சியில் இருந்து சோழமாதேவி செல்ல ரூ.7 கோடியில் பாலம், சாலை வசதி செய்து தரப்படும்; திருவெறும்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ப.குமார் வாக்குறுதி

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் ப.குமார் நேற்று கீழக்குறிச்சி கிராமத்தில் வாக்கு சேகரித்தார்.
கீழக்குறிச்சியில் இருந்து சோழமாதேவி செல்ல ரூ.7 கோடியில் பாலம், சாலை வசதி செய்து தரப்படும்; திருவெறும்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ப.குமார் வாக்குறுதி
Published on

அப்போது அங்குள்ள கோவில் அருகில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எங்களை வெற்றி பெற வைத்தால் கல்விக்கடன், விவசாயிகளின் பயிர்க்கடனை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் எதுவும் செய்யவில்லை. அவரால் செய்ய முடியாது. ஏனென்றால் அவர்கள் ஆட்சியில் இல்லை. பொய்யான வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றார்கள். ஆனால் நமது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்கு முன்பாகவே கொடுத்த வாக்குறுதிப்படி ரூ.12,110 கோடி பயிர்க்கடனை ரத்து செய்து உள்ளார். இதனால் சுமார் 16 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளார்கள். அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும். வாஷிங்மிஷின் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். மாதம் 1-ந் தேதியானால் குடும்ப பெண்களது வங்கி கணக்கிற்கு பணம் வந்து சேர்ந்து விடும். தற்போது முதல்-அமைச்சர் திருச்சிக்கு வந்த போது வாஷிங் மிஷின் மட்டுமல்ல சலவை செய்வதற்கு சலவை பவுடரும் வழங்கப்படும் என கூறினார். எனவே மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.

இந்த பகுதியில் உள்ள அடிப்படை தேவைகள் எல்லாம் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது நிறைவேற்றிக் கொடுத்து இருக்கிறேன். கீழக்குறிச்சியிலிருந்து சோழமாதேவி செல்வதற்கு திருவெறும்பூரை சுற்றி செல்வதால் பல மைல் தூரம் அலைய வேண்டி உள்ளது. ஆதலால் எங்களுக்கு உய்யக்கொண்டான் வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டி சாலை வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட இருக்கிறது. ரூ.6 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் உய்யகொண்டான் குறுக்கே பாலம் கட்டப்பட்டு சாலை அமைக்கப்படும். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்ற வாக்குறுதியை உங்களுக்கு அளிக்கிறேன். நான் இந்த ஊரின் மருமகன். எனது மாமனார் இந்த ஊரை சேர்ந்தவர் தான்.ஆதலால் என்னை வெற்றி பெறச் செய்தால் நீங்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். குறைகளை தெரிவிக்கலாம். நான் விருந்தாளி போல் வந்து செல்பவன் அல்ல. நான் இந்த ஊர் மருமகன் என்பதால் இது எனக்கு புகுந்த வீடு போன்ற ஊர். ஆதலால் என்னை இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்று மீண்டும் ஒரு முறை கேட்டு விடை பெறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். வேட்பாளருடன் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கும்பக்குடி கோவிந்தராஜன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பவுன் என்கிற டி.டி. கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் சவரி அம்மாள், ஒன்றிய கவுன்சிலர் தமிழரசி கிருஷ்ணமூர்த்தி உள்பட அ.தி.மு.க.மற்றும் த.மா.கா. நிர்வாகிகள் ஏராளமானவர்கள் சென்றிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com