

கன்னியாகுமரியை அடுத்த பஞ்சலிங்கபுரம் பகுதியை சேர்ந்த முத்துகுமார் (வயது 31), கொத்தனார். இவர் சம்பவத்தன்று கொட்டாரத்தில் நடந்த தனது நண்பரின் தம்பியின் திருமண விழாவில் பங்கேற்க சென்றார். அப்போது அங்கு இசை கச்சேரியில் பாடப்பட்ட பாடலுக்கு முத்துக்குமார் நடனமாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கும் கண்டால் தெரியும் நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முத்துகுமார் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை முத்துகுமார் தனது தம்பி சேகர்(28) என்பவருடன் மாதவபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒற்றையால்விளையை சேர்ந்த ஸ்ரீனிவாசன்(26) மற்றும் கண்டால் தெரியும் நபர் ஆகியோர் முத்துகுமாரை தடுத்து நிறுத்தி திருமண விழாவில் நடந்த தகராறை வைத்து சேகரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். மேலும் ஸ்ரீனிவாசன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முத்துகுமாரை வெட்ட முயன்றுள்ளார். ஆனால் இதை சேகர் தடுக்க முயன்றார். அப்போது அவரது கையில் வெட்டு விழுந்தது.
இதையடுத்து கண்டால் தெரியும் நபர் முத்துக்குமாரை தாக்கியுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயமடைந்த முத்துகுமார் கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், சேகர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து முத்துகுமார் கன்னியாகுமரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஸ்ரீனிவாசன் மற்றும் கண்டால் தெரியும் நபர் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஸ்ரீனிவாசன் பெயர் போலீசாரின் ரவுடி பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.