

ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் ரூ.45 கோடியில் புதிய பஸ்நிலையம் அமைக்கப்படும் என்று நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நகராட்சி கூட்டம்
ராமநாதபுரம் நகராட்சி கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் பிரவீன் தங்கம், ஆணையாளர் சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதங்கள் வருமாறு:
நகராட்சி தலைவர்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோரின் ஆசியுடன் ராமநாதபுரம் நகராட்சியில் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற இந்த முதல் கூட்டத்தில் உறுதி கூறுகிறேன்.
கவுன்சிலர் குமார்(பா.ஜ.க.): நகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு பா.ஜ.க. உறுதுணையாக இருக்கும்.
கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற்றதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும் ராமநாதபுரம் அண்ணாசிலை அருகில் கலைஞர் கருணாநிதி சிலை அமைக்கவும், பாதாள சாக்கடை திட்டத்தினை ரூ.43.76 லட்சத்தில் சீரமைக்கவும் தலைவர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாதாள சாக்கடை திட்டம்
நகராட்சி தலைவர்: பாதாள சாக்கடை திட்ட குறைபாடுகளை சரிசெய்வது குறித்து சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். அதன்படி அதனை சரிசெய்ய மதிப்பீடு தயார் செய்து விரைவில் பணி நடைபெற உள்ளது. முகவை ஊருணி கரையை சுற்றிலும் ரூ.3.5 கோடி செலவில் நடைபாதை பூங்கா, மின்விளக்கு அமைக்க முதல்-அமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். சிறுவர் பூங்கா அருகில் ரூ.1.5 கோடி செலவில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட உள்ளது. அய்யாவூரணி கரையில் ரூ.1.5 கோடி செலவில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட உள்ளது. பட்டிணம்காத்தான் சக்கரக்கோட்டை, ஆர்.எஸ்.மடை, சூரங்கோட்டை, அச்சுந்தன்வயல் ஆகிய 5 ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்து தரம் உயர்த்த வும்,ராமநாதபுரத்தில் ரூ.45 கோடியில் புதிய பஸ்நிலையம் அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்படும்.
கவுன்சிலர் பிரவீன் தங்கம்: அல்லிக்கண்மாய் சுடுகாட்டினை சீரமைக்க வேண்டும்.
தலைவர்: அந்த சுடுகாட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்கப்படும்.ஸ்டாலின் என்ற கமலக்கண்ணன்:- நகரில் தெருவிளக்குகள் எரியவில்லை. ரமேஷ்: நகரில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.
குடிநீர் திட்டம்
தலைவர்: நகராட்சி முழுவதும் ரூ.2.30 கோடியில் எல்.இ.டி. தெருவிளக்குகள் அமைக்கப்படும். விரைவில் காவிரி குடிநீர் வரத்து அதிகரிக்கும். பொட்டிதட்டி குடிநீர் திட்டத்தினை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
காயத்ரி: ராமநாதபுரம் ரெயில்வே மேம்பாலம் கட்டும்பணியை விரைவில் முடிக்க வேண்டும்.
ராஜாராம்பாண்டியன் கோபால்: பாதாள சாக்கடை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
தலைவர்: ராமநாதபுரம் ரெயில்வே மேம்பாலம் கட்டும்பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளோம். பேட்டரியில் இயங்கும் குப்பை வண்டிகள் அனைத்தும் பழுதுபார்க்கப்படும். இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன. ஆனையாளர் சந்திரா நன்றி கூறினார்.