பால்கர் அருகே சோகம்; அடுக்குமாடி கட்டிட ஜன்னல் வழியாக தவறி விழுந்து 4 வயது சிறுமி பலி

அடுக்குமாடி கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக தவறி விழுந்து 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பால்கர் அருகே சோகம்; அடுக்குமாடி கட்டிட ஜன்னல் வழியாக தவறி விழுந்து 4 வயது சிறுமி பலி
Published on

மும்பை, 

அடுக்குமாடி கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக தவறி விழுந்து 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமி

பால்கர் மாவட்டம் விரார் ஒய்.கே. நகர் பகுதியில் உள்ள பாச்ராஜ் லைப்ஸ்பேஸ் டவர் என்ற 19 மாடி கட்டிடத்தில் 4-வது மாடியில் வசித்து வருபவர் சுரேஷ். இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு 4 வயதில் தர்ஷினி என்ற மகள் இருந்தாள். சுரேஷ் குர்லா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரை தினந்தோறும் காலை மனைவி மணிமேகலை ஸ்கூட்டால் அழைத்து சென்று விரார் ரெயில் நிலையத்தில் விடுவார். நேற்று காலையும் 8 மணியளவில் சுரேஷ் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டார். அந்த நேரத்தில் தர்ஷினி அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தாள். எனவே தர்ஷினியை வீட்டில் தனியாக தூங்க வைத்துவிட்டு, மணிமேகலை கணவரை ரெயில் நிலையத்தில் விட சென்றார். அவர் திரும்பி வந்த போது தர்ஷினி கட்டிட காம்பவுண்ட் சுவர் பகுதியில் ரத்த வெள்ளத்தில் கிடந்தாள். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிமேகலை உடனடியாக மகளை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுமியை பரிசேதித்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

ஜன்னல் வழியாக தவறி விழுந்து பலி

தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி ஜன்னல் வழியாக 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்தது தெரியவந்தது. மணிமேகலை கணவரை விட சென்ற நிலையில், சிறுமி தூக்கத்தில் இருந்து எழுந்து இருக்கிறாள். வீட்டில் யாரும் இல்லாததால் பயந்து போன சிறுமி வெளியே வர முயன்று இருக்கிறாள். ஆனால் கதவு பூட்டி இருந்ததால் சிறுமியால் வெளியே வர முடியவில்லை. இதையடுத்து அவள் படுக்கையையொட்டி இருந்த ஜன்னல் கதவை திறந்து இருக்கிறாள். ஜன்னலில் கம்பி எதுவுமில்லாததால் அவள் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. மும்பை பெருநகர் பகுதிகளில் சமீபகாலமாக பாதுகாப்பு கம்பிகள் இல்லாத ஜன்னல் வழியாக குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே பாதுகாப்பு இல்லாத முறையில் அடுக்குமாடி கட்டிடங்களில் ஜன்னல்கள் அமைக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com