

கூத்தாநல்லூர்:
தினத்தந்தி செய்தி எதிரொலியாக அரிச்சந்திரபுரத்தில் புதிய பாலம் கட்டப்பட்டது.
ஆபத்தான குறுகிய பாலம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் அரிச்சந்திரபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு கால்நடை ஆஸ்பத்திரி ஒரே வளாகத்தில் வெண்ணாற்றின் கரையோரத்தையொட்டி உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அரசு கால்நடை ஆஸ்பத்திரிக்கு சென்று வருவோர் வசதிக்காக வெண்ணாற்றின் குறுக்கே மிக சிறிய அளவிலான பாலம் 80 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. நாளடைவில் அந்த குறுகிய பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டு சிமெண்டு காரைகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும் அளவில் ஆபத்தான நிலையில் இருந்தது. இதனால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு கால்நடை ஆஸ்பத்திரிக்கு சென்று வருவோர் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். எனவே ஆபத்தான குறுகிய பாலத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிதாக பெரிய அளவிலான சிமெண்டு பாலம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
புதிய பாலம் கட்டப்பட்டது
இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக வடபாதிமங்கலம் அரிச்சந்திரபுரத்தில் வெண்ணாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டது. புதிய பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.