

புதுச்சேரி
புதுவை தாவரவியல் பூங்காவில் மீன் அருங்காட்சியகம் பெயரளவிலேயே செயல்படுகிறது. இதனை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன் அருங்காட்சியகம்
புதுவையில் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கீழ் 1997-ம் ஆண்டு ரூ.36 லட்சம் செலவில் மீன் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் 30-க்கும் மேற்பட்ட கண்ணாடி தொட்டிகளில் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் நன்னீர், அலங்கார மீன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அதாவது கொய் கார்ப், அரவனா, ஆஸ்கார், சிவப்பு வால் கருப்பு சுறா, சிவப்பு துப்பு சுறா, சிங்கி இறால், டெட்ரா, பூக்கொண்ட மீன், கோல்ட் பிஷ் உள்ளிட்ட பல்வேறு வகையான அலங்கார மீன்கள் உள்ளன. ஒவ்வொரு தொட்டியிலும் அதில் உள்ள மீனின் பெயர், அதன் அறிவியல் பெயர், பிறப்பிடம், உணவு மற்றும் அதன் சிறப்புகள் குறித்த தகவல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளது.
மாணவர்கள் ஆர்வம்
இந்த மீன் அருங்காட்சியகம் தினமும் காலை 8.45 முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் மாலை 5.45 வரையும் திறந்திருக்கும். இதனை பார்வையிட நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.10-ம் (12 வயதுக்கு மேல்), சிறுவர்களுக்கு ரூ.5-ம் (3 வயதுக்கு மேல்) வசூலிக்கப்படுகிறது. மீன்களை புகைப்படம் எடுக்க (கேமரா, செல்போன்) ரூ.15-ம், வீடியோவுக்கு ரூ.35-க்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதுவை தாவரவியல் பூங்காவுக்கு வருகை தரும் உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளிகளில் இருந்து சுற்றுலாவுக்கு அழைத்து வரும் மாணவ-மாணவிகள் மீன் அருங்காட்சியகத்தை பார்வையிட ஆர்வம் காட்டுகின்றனர்.
குறிப்பாக வாரவிடுமுறை மற்றும் பண்டிகை கால விடுமுறை நாட்களில் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இந்த மீன் அருங்காட்சியகம் உள்ளது.
பெயளரவில் செயல்படுகிறது
கொரோனாவுக்கு பின் மீன் அருங்காட்சியகம் பெயரளவில் தான் செயல்பட்டு வருகிறது. ஒரு சில தொட்டிகள் காலியாகவும், பெரும்பாலான தொட்டிகளில் ஓரிரு மீன்கள் மட்டுமே உள்ளது. இதனால் மீன் அருங்காட்சியகத்திற்கு ஆர்வத்துடன் வருபவர்கள், ஏமாற்றத்துடன் செல்லும் நிலை உள்ளது.
எனவே மீன்வளத்துறையினர் மீன் அருங்காட்சியகத்தை மேம்படுத்தி கூடுதலாக அலங்கார மீன்களை வாங்கிவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.