சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க தடுப்புகள் அமைப்பு

புதுவை கடற்கரையில் மணல் அரிப்பு ஏற்பட்டுள்ள இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க தடுப்புகள் அமைப்பு
Published on

புதுச்சேரி

புதுவை கடற்கரையில் மணல் அரிப்பு ஏற்பட்டுள்ள இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடல் அரிப்பு

புதுச்சேரியில் கடல் அரிப்பை தடுக்க பழைய துறைமுகம் முதல் வைத்திக்குப்பம் வரை கடற்கரையோரம் முழுவதும் பெரிய அளவிலான கருங்கற்கள் கொட்டப்பட்டன. மேலும் அங்கு செயற்கை மணல் பரப்பும் உருவாக்கப்பட்டது. இதற்காக தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் தூர்வாரும் மணலை குழாய் மூலம் கொண்டு வந்து கொட்டினர்.

இதன் காரணமாக தற்போது தலைமை செயலகம் முன்பு முதல் பாண்டி மெரினா பீச் வரை அழகிய மணல் திட்டு உருவாகி உள்ளது. இந்த நிலையில் தற்போது கடற்கரை சாலையில் டூப்ளக்ஸ் சிலை அருகில் இருந்து சீகல்ஸ் உணவகம் வரை சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு கடல் அரிப்பு உருவாகி உள்ளது.

தடுப்புகள் அமைப்பு

இதனால் செயற்கை மணல் பரப்புகள் கரைந்து கருங்கற்கள் வெளியே தெரிகின்றன. இந்த கடல் அரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் அதிகாரிகள் மணல் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு நலன் கருதி தற்காலிகமாக தடுப்புகள் அமைக்க அமைச்சர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் அரிப்பு ஏற்பட்ட இடத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு தடுப்புக் கட்டைகள் அமைத்துள்ளனர். மேலும் அங்கு மணலை கொட்டி அரிப்பை சரிசெய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com