மலைக்க வைக்கும் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார்!


மலைக்க வைக்கும் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார்!
x

உச்சிப் பிள்ளையார் சன்னதியில் இருந்தும், பிரகாரத்தில் இருந்தும் பார்த்தால் திருச்சி மாநகரத்தின் முழு தோற்றத்தையும் காண முடியும்.

மலைக்க வைக்கும் மலைக்கோட்டை, வியக்க வைக்கும் கலைக்கோவில்கள், அழகு மிளிரும் அகண்ட காவிரி... இவை திருச்சி மண்ணின் விசேஷ அடையாளங்கள்.

தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி மாவட்டம் ஆன்மிக பூமியாகவும் திகழ்கிறது. திருச்சி நகரில் மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில், திருச்சியை அடுத்துள்ள சமயபுரத்தில் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் கோவில், வயலூரில் முருகன் கோவில், குணசீலத்தில் பெருமாள் கோவில், உத்தமர் கோவில்... இப்படி எண்ணற்ற இந்து கோவில்கள் திருச்சியை சுற்றி அமைந்துள்ளன.

மலைக்கோட்டை மகிமைகள்

கல்தோன்றிய காலந்தொட்டு இன்றும் கம்பீரமாக நிற்கிறது மலைக்கோட்டை. இந்த மலையின் வயது 230 கோடி ஆண்டுகளுக்கும் மேல் என்கிறார்கள். 850 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் உருகி கிடந்த பாறைக் குழம்பு குளிர்ந்து உருவானதுதான் இந்த மலைக்கோட்டை மலை.

நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல் மலைகளைபோல் அல்லாமல், காவிரி பாசன பகுதியின் தொடக்கத்தில் தனித்துண்டாக இந்த மலை காட்சியளிக்கிறது. திருச்சி மற்றும் சுற்றுப்புற பகுதியில் தரை மட்டத்துக்கு கீழே உள்ள தகடு போன்ற பெரும் பாறை பரப்பின் துருத்தல்களாக பொன்மலை, ராம்ஜி நகர், குட்டிமலை, திருவெறும்பூர், எறும்பீஸ்வரர் மலை, துவாக்குடி மலை ஆகியவை உள்ளன.

இவை எல்லாவற்றிலும் முதன்மையானது மலைக்கோட்டை மலை. சார்னோகைட் வகையை சேர்ந்தது இந்த பாறை. தென் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் கிரீன்லாந்து போன்ற பகுதிகளிலும் இத்தகைய பாறைகள் காணப்படுகின்றன.

திருச்சியில் உள்ள மலைக்கோட்டை மலையுடன் ஒப்பிட்டால் இமயமலையே வயதில் சின்னக்குழந்தைதான் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இந்த மலைக்கோட்டையின் உச்சியில் அமைந்து உள்ள பிள்ளையார் 'உச்சி பிள்ளையார்' என்று அழைக்கப்படுகிறார்.

இந்த கோவில், தரையில் இருந்து 273 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கோவிலுக்கு செல்வதற்கு மலையை குடைந்து படிக்கட்டுகள் அமைத்துள்ளனர். இந்த படிக்கட்டுகளின் வழியாக நடந்து சென்றுதான் உச்சி பிள்ளையாரை தரிசிக்க முடியும்.

தல புராணம்

ஸ்ரீராமர் பட்டாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விபீஷணர் பட்டாபிஷேகம் முடிந்த பின்னர் இலங்கைக்கு திரும்பியபோது ஸ்ரீ ராமபிரான் தனது மூதாதையர் வழிபட்ட ரங்கநாதரின் சிலையை விபீஷணருக்கு பரிசாக அளித்து, அதை பூமியில் வைத்தால் அந்த இடத்தில் அப்படியே பதிந்து விடும் என்பதையும் தெரிவித்தார். விபீஷணர் அந்த சிலையை இலங்கையில் வைக்க விரும்பி இலங்கைக்கு கொண்டு செல்லும் வழியில் காவிரியில் நீராடி பூஜை செய்ய விரும்பினார்.

ஆனால் அந்த ரங்கநாதர் திருச்சியில் இருக்க வேண்டும் என்பது விநாயகரின் திருவுளம். அவர் சிறுவனாக வடிவெடுத்து விபீஷணர் முன்பு தோன்ற, விபீஷணர் அவரிடம் ரங்கநாதர் சிலையை கொடுத்து விட்டு நீராட சென்றார்.

மூன்று முறை விபீஷணரை அழைத்து விட்டு பூமியில் ரங்கநாதரை வைத்து விட்டு விநாயகர் சிராமலை மீதேறி ஓடினார். குளித்து விட்டு வந்த விபீஷணர் ரங்கநாதர் சிலையை எடுக்க முயன்றார். அது முடியாமல் போகவே, சிறுவனை துரத்தி சென்று தலையில் குட்டினார். சிறுவன் உச்சி பிள்ளையாராக காட்சி அளித்ததும் திகைத்தார் என்கிறது இக்கோவில் தல வரலாறு.

தலையில் பள்ளம்

இப்போதும் உச்சி பிள்ளையார் தலையில் 4 அங்குல ஆழ பள்ளம் (விபீஷணனால் குட்டுப்பட்டதால் ஏற்பட்ட பள்ளம்) இருப்பதை காணலாம். உச்சி பிள்ளையார் சன்னதியின் பின்புறம் விபீஷணர் பாதம், அவன் மண்டியிட்ட தோற்றம், எழுந்து ஓடுவது போன்ற தோற்றம் பாறை மீது பதிந்து உள்ளதை காணலாம்.

உச்சி பிள்ளையார் சன்னதியில் இருந்தும், பிரகாரத்தில் இருந்தும் பார்த்தால் திருச்சி மாநகரத்தின் முழு தோற்றத்தையும், வைணவ தலங்களுள் முதன்மையான ஸ்ரீரங்கத்தையும், சிவத்தலங்களுள் பஞ்ச பூத தலங்களுள் ஒன்றான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலையும், அருகில் காவிரி பெருக்கெடுத்து ஓடுவதையும், இரவு நேரத்தில் திருச்சி மாநகர் ஒளி வெள்ளத்தில் ஜொலிப்பதையும் கண்டு ரசிக்கலாம்.

இந்த கோவிலில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்து இருக்கும். ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி விழா பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.


Next Story