நிர்வாண படங்களை வெளியிட்ட நடிகர் ரன்வீர் சிங்- போலீசில் புகார்

நிர்வாண படங்களை வெளியிட்ட நடிகர் ரன்வீர் சிங் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
நிர்வாண படங்களை வெளியிட்ட நடிகர் ரன்வீர் சிங்- போலீசில் புகார்
Published on

மும்பை, 

நிர்வாண படங்களை வெளியிட்ட நடிகர் ரன்வீர் சிங் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

நிர்வாண புகைப்படம்

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். இவர் தான் எடுத்துக்கொண்ட வித்தியாசமான படங்களை வலைதளத்தில் வெளியிடுவது வழக்கம். இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு ரன்வீர் சிங் நிர்வாணமாக எடுத்த அவரது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கினார்

இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருந்த அதே சமயம் சலசலப்பை ஏற்படுத்தியது.

நடிகை எதிர்ப்பு

இதுகுறித்து நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான மிமி சக்கரவர்த்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "ரன்வீரின் இந்த புகைப்படங்கள் பாராட்டப்படுகின்றன. கருத்துகள் பெரும்பாலும் நல்ல விதமாக இருக்கின்றன. ஆனால் இதேபோன்ற படங்களை வெளியிட்டது ஒரு பெண்ணாக இருந்தால் இப்படி பாராட்டுகள் கிடைத்திருக்குமா என்று யோசிக்கிறேன்.

அந்த பெண்ணின் வீட்டை நீங்கள் எரித்திருப்பீர்கள், அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி இருப்பீர்கள், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கும், அவளை அவமானப்படுத்தி இருப்பீர்கள்" என்று கூறியுள்ளார்.

ரன்வீர் சிங் விளக்கம்

இந்த சர்ச்சைகளுக்கு பதிலளித்துள்ள நடிகர் ரன்வீர் சிங், "நான் உடல் ரீதியாக நிர்வாணமாக இருப்பது என்பது எளிதானது. என்னுடைய ஆன்மா நிர்வாணமானது தான். எல்லாருடையதும் அப்படிதான் இருக்கும் என்பது உண்மை.

நான் ஆயிரம் பேருக்கு முன்னால் நிர்வாணமாக இருக்க தயக்க மாட்டேன். ஆனால் எனக்கு முன்னால் இருப்பவர்கள் அசவுகரியமாக உணர்வார்கள் என்பது தான் உண்மை" என்றார்.

போலீசில் புகார்

இந்தநிலையில் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர் ரன்வீர் சிங் மீது மும்பை கிழக்கு புறநகரில் உள்ள செம்பூர் போலீஸ் நிலையத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

அந்த புகாரில், "நடிகர் ரன்வீர் சிங் தனது நிர்வாண புகைப்படங்கள் மூலம் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளார். அவர்களின் கண்ணியத்தை அவமதித்துள்ளார். எனவே அவர் மீது இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என கூறப்பட்டு உள்ளது.

இந்த புகார் மீது இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை, விசாரணை நடந்து வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தி நடிகர்கள் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், ரன்வீர் சிங் நிர்வாண புகைப்பட சர்ச்சையில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com