ஆடிப்பெருக்கு விழா - காவிரி ஆற்றில் புனித நீராடி பொதுமக்கள் வழிபாடு

காவிரி கரையோர மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஆடிப்பெருக்கு விழா - காவிரி ஆற்றில் புனித நீராடி பொதுமக்கள் வழிபாடு
Published on

திருச்சி,

தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளின் கரையோரங்களிலும் ஆடிப்பெருக்கு விழா, ஆடி மாதத்தின் 18ம் நாள் கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக காவிரி கரையோர மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில், பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றி, கணவனின் கையால் கட்டிக் கொண்டார்கள். புதுமண தம்பதிகள் தங்கள் திருமண மாலையை காவிரி ஆற்றில் விட்டு சூரிய பகவானை வழிபட்டனர்.

'ஆடிப்பட்டம் தேடி விதை' என்பது பழமொழி. ஆகையால் விவசாயத்திற்கு உறுதுணையாக விளங்கும் பொங்கிவரும் காவிரியை வரவேற்று, காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விழாவாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும், பெண்கள் பழங்கள் மற்றும் அரிசி உள்ளிட்டவைகளை வைத்து வணங்கி வழிபாடு நடத்தினர். சுமங்கலி பெண்கள் அரிசி, பழம் போன்றவற்றை வைத்து பூஜை நடத்தி, தீபாராதனை காண்பித்து பின்பு பழம், அரிசி போன்றவற்றை நீரில் விட்டனர். மேலும் காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாகவும், அந்த நீரால் தானியங்களை தூவி நீருக்கும் நன்றி செலுத்தினர்.

இதை போல, தஞ்சாவூரில் உலகப்பிரசித்திபெற்ற தஞ்சை பெரிய கோயில் அருகில் உள்ள கல்லணை கால்வாய், கும்பகோணம் ஆகிய இடங்களிலும் பெண்கள் ஆடிப்பெருக்கு விழாவினை கொண்டாடினர். சிலர் தங்களது வீடுகளில் உள்ள குடிநீர் குழாய், கிணறு ஆகிய இடங்களில் பூஜைகள் செய்து வழிபட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com