

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் சபாநாயகர் அப்பாவு போட்டியிடுகிறார். இவர் தனது கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்தும், கிராமங்கள் தோறும் திறந்தவெளி ஜீப்பில் நின்றவாறும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
நேற்று உவரியில் பிரசாரத்தை தொடங்கிய வேட்பாளர் அப்பாவு, பாத்திமா நகர், கூத்தங்குழி, இடிந்தகரை, சுனாமி காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி, வீதியாக சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரசாரத்தில் வேட்பாளர் அப்பாவு பேசும்போது கூறியதாவது:-
ராதாபுரத்தில் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் பயிற்சி மையத்திற்கு 1.60 கோடி ரூபாயில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி மற்றும் மீன்வளத்துறை மூலம் வழங்கப்படும் நலஉதவிகளை மீனவர் சமுதாயத்தினர் பெற்று பயனடைகின்றனர். கூத்தங்குழியில் ரூ.2.31 கோடியில் மீன் இறங்கு தளம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கூத்தங்குழி அரசு துணை சுகாதார மையத்திற்கு ரூ.28 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. விஜயாபதி பஞ்சாயத்து தாமஸ் மண்டபம் அருகில் 10 ஏக்கரில் சர்வதேச விளையாட்டு மற்றும் பயிற்சி மையம் அமைப்பதற்கு ரூ.14.77 ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அருவிக்கரையில் ரூ.10 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது.
இடிந்தகரையில் ரூ.1.12 கோடியில் மீன் ஏலக்கூட கட்டிடம், உயர் மின் கோபுர விளக்கும் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. பெருமணல் மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்கும் பணிக்காக ரூ.19.33 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கான அரசாணை பெறப்பட்டு விரைவில் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. தோமையார்புரத்தில் ரூ.13.70 கோடியில் தூண்டில் வளைவு அமைப்பதற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மீனவர் இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உவரியில் 118 பேர், கூத்தங்குழியில் 300 பேர், இடிந்தகரையில் 445 பேர் என கடற்கரை கிராமங்களில் மொத்தம் 945 பேர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை, மீன்பிடி குறைவு கால நிவாரண தொகை, பேரிடர் கால நிவாரண தொகை, மீனவ மகளிர் குழுக்களுக்கு நுண்கடன், சேமிப்பு மற்றும் நிவாரண நிதி, மானியத்துடன் கூடிய வாகன கடனுதவி என பல்வேறு நிதிகள் வழங்கப்பட்டுள்ளன. மீனவ சமுதாயத்தினருக்கு எண்ணிலடங்கா திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி மீனவ நண்பனாக விளங்கும் தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றிக் கடனாக உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாரத்தில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளரும் மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், யூனியன் கவுன்சிலர்கள் ஜேசுராஜ், மவுலின், பஞ்சாயத்து தலைவர் வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.