தமிழ்நாடு வளர்ச்சி பெற மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்; நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் பிரசாரம்

தமிழ்நாடு வளர்ச்சி பெற மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்; நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் பிரசாரம்
Published on

திசையன்விளை,

தமிழ்நாடு வளர்ச்சி பெற மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும் என்று நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் பிரசாரம் செய்தார்.

நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் நேற்று கீழகோவிலம்மாள்புரம், உதய மார்த்தாண்டபேரி, மலையநேரி, செட்டிமேடு, டோனாவூர், செங்களாகுறிச்சி, கட்டளை, தெற்கு மாவடி, மாவடி புதூர், திரட்டூர், சீவலப்பேரி, மூங்கிலடி, மூலைக்கரைப்பட்டி, அச்சம்பாடு உள்ளிட்ட இடங்களில் திறந்த வேனில் சென்றபடி வாக்குகள் சேகரித்தார். அவருக்கு அங்கு திரண்டிருந்த கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசியதாவது:-

உங்கள் ஒவ்வொருவருடைய வாக்குகளையும் கேட்டு கிராமம், கிராமமாக வந்துகொண்டிருக்கின்றேன். உங்கள் எல்லோருடைய முகத்திலும் மகிழ்ச்சியைப் பார்க்க முடிகின்றது. அதற்கு காரணம், நம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாதம்தோறும் தந்துகொண்டிருக்கின்ற ஆயிரம் ரூபாய் மகளிர் உதவித்தொகை தான். பெற்ற பிள்ளைகூட இந்தக் காலத்தில் ஆயிரம் ரூபாய் மாதம்தோறும் தராது. ஆனால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்து, உரிமைத்தொகையை தந்துகொண்டிருக்கின்றார் என்று, நீங்கள் பெருமையாக சொல்வதை பார்க்க முடிகிறது.

அந்த அளவுக்கு, நம் தமிழ்நாட்டில் பெண்கள் ஆதரவுப்பெற்ற ஆட்சியை மு.க.ஸ்டாலின் தந்துகொண்டிருக்கின்றார். மகளிர் உரிமைத்தொகையை பார்த்து, மற்ற மாநில மக்களும், தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி நடந்துகொண்டிருக்கின்றது என்று பாராட்டுகிறார்கள். மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்-அமைச்சராக வரும்போது, இந்த மகளிர் உதவித்தொகை ரூ.2 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படவுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக ஒரு சட்டமன்ற உறுப்பினராக பல்வேறு நலத்திட்ட உதவிகளை உங்கள் பகுதிக்கு கொண்டு வந்திருக்கிறேன். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவன் நான். அந்தக் காலக்கட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் மட்டும் இலவசமாக கல்விக்கொடுக்கவில்லை என்றால், இந்த ரூபி மனோகரன் நிச்சயமாக இந்த இடத்தில் இல்லை. எங்கேயோ, ஏதோ ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்திருப்பேன்.

இன்று, மு.க.ஸ்டாலின், கல்வி உதவித்தொகையும் சேர்த்தே வழங்கி வருகிறார். அரசுப் பள்ளிக்கூடங்களில் பிளஸ்-2 படித்து முடிக்கும் மாணவ, மாணவிகள் உயர் கல்வியை தொடர மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறார்.

இந்த திட்டம் கிராமப்புறங்களைச் சேர்ந்த பல குடும்பங்களை பொருளாதார ரீதியாக உயர்த்தி இருக்கிறது. ஒரு குடும்பத்தில், பெண் குழந்தைக்கு படிப்பை கொடுத்துவிட்டால் போதும். ஒட்டுமொத்த குடும்பமும் உயர்ந்த நிலைக்கு வந்து விடும். நம் குழந்தைகளுக்காக கார், பங்களா, சொத்து என்று நாம் எதையும் சேர்த்துவைக்க வேண்டும் என்கிற அவசியமே இல்லை. அவற்றை எல்லாம்விட உயர்ந்த செல்வம் கல்வி தான். இன்று கல்விக்கான வாய்ப்புகளும், வேலைவாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கின்றன.

நம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், கல்வி உதவித்தொகை 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட இருக்கின்றது. விரும்பிய உயர் கல்வியை படித்து முடித்துவிட்டால், உலகத்தின் எந்த மூலைக்கும் வேலைவாய்ப்பை தேடிப் போகலாம். அதேபோல் நான் முதல்வன் திட்டத்தில் சேர்ந்து போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு அங்கேயும் இலவச பயிற்சி, மாதம்தோறும் ஊக்கத்தொகை தருகிறார்கள்.

இப்படி, நம் பிள்ளைகளுக்காக நிறைய திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் தொடர வேண்டும், தமிழ்நாடு வளர்ச்சிபெற வேண்டும் என்றால், மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும். மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்-அமைச்சராக இந்த நாங்குநேரி தொகுதியில் நான் மீண்டும் வெற்றிபெற வேண்டும். நீங்கள் எல்லாம் என்னை வெற்றிபெறச் செய்வீர்கள் என்கிற நம்பிக்கை, எனக்கு 100 சதவீதம் இருக்கிறது.

இப்போது உங்களிடம் வாக்குகள் கேட்டு வரும் நான், தேர்தலில் வெற்றிபெற்றதும், நன்றி சொல்ல மீண்டும் உங்களைத் தேடி மிக விரைவிலேயே வருவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com