கோவில்பட்டி தொகுதியில் "கடம்பூர் ராஜூ 4-வது முறையாக அமோக வெற்றி பெறுவார்" - டி.டி.வி. தினகரன்

கோவில்பட்டி,
கோவில்பட்டி தொகுதியில் "கடம்பூர் ராஜூ 4-வது முறையாக அமோக வெற்றி பெறுவார்" - டி.டி.வி. தினகரன்
Published on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூ 4-வது முறையாக அமோகமாக வெற்றிபெறுவார் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டிக்கு வந்தார். அவருக்கு அண்ணா பஸ்நிலையம் அருகே வேட்பாளர் தலைமையில் கூட்டணி கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

திறந்த வேனில் நின்றவாறு டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-

நான் இங்கு வந்து கடம்பூர் ராஜூவுக்கு ஆதரவாக ஓட்டு கேட்பது நிறைய பேருக்கு ஆச்சரியமாக இருக்கும். எங்களுக்குள் தனிப்பட்ட முறையில் எந்த பகையும் கிடையாது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாங்கள் 2 பேரும் எதிர்த்து நின்றோம். அவர் வெற்றி பெற்றார். இரட்டை இலை வெற்றி பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி தான்.

கடந்த 1999-ம் ஆண்டு கடம்பூர் ராஜூ எனக்கு அறிமுகமானார். அப்போதிலிருந்து நாங்கள் நண்பர்களாக பழகி வருகிறோம். 2017-ம் ஆண்டு என்னை கட்சியை விட்டு வெளியேற்றினாலும் தனிப்பட்ட முறையில் என்னுடன் நல்ல நட்பு கொண்டவர் கடம்பூர் ராஜூ. சில பேர் நண்பர்கள் என்று சொல்வார்கள். ஆனால் அவர்கள் காணாமல் போய்விட்டார்கள். நாங்கள் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள். அவரால் நண்பரானவர்கள். கோவில்பட்டியில் 3 முறை ஹாட்ரிக் வெற்றி பெற்றகடம்பூர் ராஜூ 4-வது முறையும் வெற்றி பெறுவது நிச்சயம்.

எப்போது பார்த்தாலும் தொகுதிக்கு ஏதாவது வேண்டுமென்று கேட்டுக் கொண்டே இருப்பார். இவரைப்போன்று தான் ஒரு எம்.எல்.ஏ. இருக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனே பாராட்டியுள்ளார்.

அ.தி.மு.க. ஆட்சியில் தான் கோவில்பட்டி நகருக்கு சீவலப்பேரி குடிநீர் 2-வது பைப்லைன் திட்டம், அரசு கலைக் கல்லூரி, உலகத்தரம் வாய்ந்த செயற்கை புல்வெளி ஆக்கி மைதானம், விளையாட்டு வீரர்கள் பயிற்சி கூடம் என அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டது.

மனதளவில் நானும், கடம்பூர் ராஜூவும் நண்பர்களாக இருப்பதால்தான் இருவரும் இணைந்து வருகிறோம். எனக்கு யாருடனும் போட்டி கிடையாது, பொறாமையும் கிடையாது. அவருடைய திறமையால் அவர் வெற்றி பெற்றார். மக்கள் வாக்களித்தார்கள். ஓட்டப்பிடாரம் தொகுதியில் எங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுந்தர்ராஜ் வெற்றிக்கு அதிமுகவினர் கடுமையாக உழைக்கின்றனர்.

மாவட்டச் செயலாளர் என்கிற முறையில் கடம்பூர் ராஜூவும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் நடக்கும் தேர்தல் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். அதேபோலத்தான் நானும் இங்கு வந்து ஓட்டு கேட்கிறேன். கூட்டணியில் இருப்பதால் மட்டுமல்ல, என்னுடைய பழைய நண்பர் என்பதால் இங்கு வந்து இரட்டை இலைக்கு ஓட்டு கேட்கிறேன். எல்லாரும் இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போட்டு கடம்பூர் ராஜூவை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com