மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெறும் மு.க.ஸ்டாலின்


மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெறும் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 15 April 2024 6:18 AM GMT (Updated: 15 April 2024 2:38 PM GMT)

'கட்சியினர் அத்துமீறல்களில் ஈடுபட்டால் கடுமையாக நடவடிக்கை எடுக்கின்றார்' என்ற நல்ல பெயரை மக்கள் மத்தியில் பெற்றுள்ளார் மு.க.ஸ்டாலின்.

மக்களிடத்தில் ஓட்டு சேகரிக்க வரும் கட்சியினரிடம் தங்களுக்கு நிறைவேற்றாத வாக்குறுதிகளை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்பது வழக்கமான ஒரு செயல்.

அனைத்து கட்சித் தலைவர்களிடமும் மக்கள் கேள்வி கேட்கின்றனர். ஆளும் கட்சியாக இருந்தாலும் விடுவதில்லை, எதிர்க்கட்சியாக இருந்தாலும் விடுவதில்லை. இது தமிழ்நாட்டு வழக்கம். பழக்கம்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தேர்தல் பரப்புரையிலும் கேள்விகளை மக்கள் கேட்கின்றனர்.

ஈரோட்டில் மு.க. ஸ்டாலின் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது பெண் ஒருவர் தனக்கு மகளிர் உரிமை தொகை ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பினார். அவர் ஏதாவது காரணம் இருக்கும், விசாரிக்கிறேன் என்றார். தனது கணவர் அரசாங்க வேலையில் இருக்கிறார் என்று அந்தப் பெண் கூறினர். அதனால்தான் உரிமை தொகை உங்களுக்கு கிடைக்கவில்லை என ஸ்டாலின் பதிலளித்தார். இருந்தாலும் அந்தப் பெண் விடாமல், கேள்வி எழுப்பினாலும், ஸ்டாலினும் திமுக கட்சிக்காரர்களும் கண்ணியமாகக் கடந்துசென்றனர்.

ஏப்ரல் 5ம் தேதி பெரம்பலூரில் உதயநிதியிடமும் இதுமாதிரி மகளிர் உரிமைத் தொகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. தேர்தலுக்கு பின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என நிதானமான முறையில் பதிலளித்தார்.

ஆனால், திருப்பூரில் GST குறித்து கேள்வி எழுப்பிய பெண் மீது பாஜகவினர் வாக்குவாதத்திலும் தாக்குதலிலும் ஈட்டுபட்டிருப்பது மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் பெண் ஒருவர் சிறு விற்பனைக் கடையை நடத்தி வருகிறார்.

11.04.2024 அன்று மாலை நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. சார்பாக வாகன பிரச்சாரம் ஆத்துப்பாளையம் பகுதியில் நடைபெற்று உள்ளது.அப்போது அங்கு பேசிய பாஜக நிர்வாகிகள் ஒன்றிய பாஜக அரசு மக்களுக்கு நிறைய வரி சலுகைகள் கொடுத்துள்ளதாகவும், நிறைய நலவாழ்வுத் திட்டங்களை நிறைவேற்றி இருப்பதாகவும் பரப்புரையில் பேசினார்கள்.

இவர்களின் இந்தப் பிரச்சாரத்தை கேட்ட பொதுமக்கள், பாஜகவினரிடம் சென்று கேள்விகளை கேட்கத் தொடங்கினர். அவர்களுடன் அந்த பெண்ணும் சென்று, ஜிஎஸ்டி வரி குறித்தும், அதனால் திருப்பூர் தொழில்கள் நசிவடைந்தது குறித்தும் கேட்டார். இதனால் பாஜகவினர் ஆத்திரம் அடைந்தனர்.

அனைவரும் கலைந்து சென்ற பிறகு அந்த பெண் தன்னுடைய கடைக்கு திரும்ப வந்து வழக்கம்போல் தன்னுடைய பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவரைப் பின்தொடர்ந்து வந்த ஆத்துப் பாளையம் பகுதியில் வசிக்கும் பாஜகவினர் தனியாக இருந்த அப்பெண்ணின் கடைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கி கலாட்டா செய்துள்ளனர்.

இதுகுறித்து வேலம்பாளையம் காவல் நிலையத்தில், தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. புகாரை பெற்றுக் கொண்ட காவல்ஆய்வாளர் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

மக்கள் கேள்வி கேட்கும் போது, பாஜகவினர் பதட்டப்படுகின்றனர். பாஜக தலைவர்களும் பதட்டப்பட்டு இவ்வாறு ஏதாவது பேசி சர்ச்சையில் மாட்டிக் கொள்கின்றனர். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் நிவாரண நிதியை பிச்சை என்று கூறி சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.

பாஜக தமிழ்நாட்டு அரசியல் சூழலையும் புரிந்துகொள்ளவில்லை. தமிழ்நாட்டுக் கட்சியாகவும் நடந்துகொள்ளவில்லை. திராவிடக் கட்சிகள், குறிப்பாக ஸ்டாலின், தன் கட்சியினர் அத்துமீறல்களில் ஈடுபட்டால் கடுமையாக நடவடிக்கை எடுக்கின்றார் என்ற நல்ல பெயரை மக்கள் மத்தியில் பெற்றுள்ளார்.


Next Story