செம்மஞ்சேரி சத்தியபாமா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: அமைச்சர் அருண்ராஜ் பங்கேற்பு

சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2026ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அருண்ராஜ் கலந்துகொண்டார்.
செம்மஞ்சேரி சத்தியபாமா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
Published on: 

சென்னை,

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2026ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அருண்ராஜ் கலந்துகொண்டு 167 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் பி.எஸ்.சி. நர்சிங் பாடத்திட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஹில்டா பாப்பி நெஸ்டர் என்னும் தங்கப்பதக்க விருது வழங்கப்பட்டது.

பட்டமளிப்பு விழா

சென்னை ஓ.எம்.ஆர். சாலை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் மரியஜீனா ஜான்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு சுகாதாரம் மருத்துவ கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

57 நர்சிங், 5 டி. பார்மசி, 9 எம்.டி.எஸ். மற்றும் 96 எம்.பி.ஏ. (ஆன்லைன்) பட்டதாரிகள் என மொத்தம் 167 பேருக்கு பட்டங்களை அமைச்சர் அருண்ராஜ் வழங்கினார்.

தங்கப்பதக்க விருது

2026-ஆம் ஆண்டு பி.எஸ்சி. நர்சிங் பிரிவில் முதலிடம் பெற்ற மகிதா தர்ஷினிக்கு திருமதி. ஹில்டா பாப்பி நெஸ்டர் என்ற தங்கப்பதக்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. பட்டங்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து, பட்டதாரிகள் அனைவரும் தொழில் நேர்மை, ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் சேவை செய்வதாக பட்டமளிப்புவிழாவில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

வேலைவாய்ப்பு

இந்நிலையில் 2025-26 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக சத்யபாமா பல்கலைக்கழகம் பெருமையுடன் அறிவித்துள்ளது. மொத்தம் 58 மாணவர்கள் பயின்ற நிலையில் 58 பேருக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் செயின்ட் இசபெல் மருத்துவமனை, சிம்ஸ் மருத்துவமனை, காவேரி மருத்துவமனை, அடையாறு புற்றுநோய் நிறுவனம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட புகழ்பெற்ற மருத்துவ நிறுவனங்களில் மாணவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் சர்வதேச அளவிலான சாதனையாக ஒரு மாணவர் ஜெர்மனி நாட்டில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளார். இது பல்கலைக்கழகத்தின் சர்வதேச வளர்ச்சியையும், மாணவர்களுக்கு கிடைக்கும் உலகளாவிய வேலைவாய்ப்புகளையும் எடுத்துக்காட்டுகிறது.

7 புதிய செவிலியர் கல்லூரிகள்

பின்னர் மேடையில் அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது:-

ஏழு புதிய செவிலியர் கல்லூரிகளை ஆரம்பித்துள்ளோம். 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு இதற்கு முன்னால் இருந்த அரசுகள் புதிய செவிலியர் கல்லூரிகள் ஆரம்பிப்பதற்கு எந்த முன்னெடுப்பும் எடுக்காத சூழலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்தவுடன் முதல் பட்ஜெட்டிலேயே ஏழு புதிய செவிலியர் கல்லூரிகள் ஆரம்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு மூன்று மாதத்திற்கு உள்ளாகவே அனைத்து செவிலியர் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம் அதுதான் நம்முடைய அரசு.

பல வருடங்களாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நீண்ட நாட்கள் கோரிக்கையை எழுந்துள்ளது. முதல் கட்டமாக 2500 தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதற்கான ஆணை அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது, இதற்காக முதற்கட்டமாக 4724 செவிலியர்கள் காலி பணியிடங்களுக்கு மாவட்ட நல சங்கங்கள் மூலமாக வெளிப்படை முறையில் எந்தவித சிபாரிசு இல்லமால் படித்து முடித்த இளைஞர்களுக்கு அரசு சார்பில் வேலை உண்டு, அவர்களை தேர்ந்தெடுத்து பணி ஆணைகளை வழங்க உள்ளோம்.

அடுத்த கட்டமாக 1,695 செவிலியர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கி மாவட்ட நல சங்கங்கள் மூலமாக தேர்ந்தெடுத்து பணி ஆணை வழங்க உள்ளோம்

இவ்வாறு அவர் கூறினார்.

X